Log in

Register



Wednesday, 29 December 2021 18:55

சித்ஸ்ரீராம் பாடியதில் என்ன தவறு?

Written by ISR Selvakumar
Rate this item
(0 votes)

சித் ஸ்ரீராம் ஏன் விமர்சிக்கப்படுகிறார்? இதற்கான பதில் ஏன் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலுக்கு உருகுகிறோம் என்பதில் இருக்கிறது. சில திரை இசைப் பாடல்களுக்கு, சினிமாவையும் தாண்டி நிலைத்து நிற்கும் Cult Status வந்துவிடும். உள்ளத்தில் நல்ல உள்ளம் அப்படி ஒரு பாடல். பாடலை பாடுபவர், இசைப்பவர், இரசிப்பவர் என அனைவரையும் ஒரு புள்ளியில் இணைத்து நெகிழ வைக்கும் தன்மை இந்தப் பாடலுக்கு உண்டு. சித்ஸ்ரீராமும் அப்படி நெகிழ்ந்து போன ஒரு இரசிகர்களில் ஒருவர்தான். என்னைப் போன்ற சாதாரண இரசிகன், ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அது தரும் உணர்வுகளால் நெகிழ்கிறோம். சித்ஸ்ரீராம் ஒரு பாடகராகவும் இருப்பதால் ஒவ்வொரு முறையும் அதன் இசை நுணுக்கங்களையும் சேர்த்து இரசிப்பவராக இருக்கிறார். நீங்களோ நானோ அந்தப் பாடலை என் நண்பனுக்கோ, மகளுக்கோ பரிந்துரைக்கிறோம், திரும்பக் கேட்கிறோம். சித்ஸ்ரீராம் அந்தப்பாடல் வழியாக தனது கர்நாடக இசை அறிவை வெளிப்படுத்த முயற்சி செய்கிறார். இதுதான் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலின் இரசிகராக நமக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம். ஆனால் இங்குதான் சிக்கல் வருகிறது. எம்.எஸ்.வி, இளையராஜா போன்ற திரை இசை மேதைகள் கிளாசிகல் இசையை கையாண்ட விதத்திற்காக சில நேரம் கர்நாடக இசை இரசிகர்களால் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ராகத்தை கெடுத்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள். இப்போது நாம் கொண்டாடும் கர்ணன் படப்பாடல்கள் வெளிவந்தபோது மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணையின் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். சிந்து பைரவிக்காக அதே போல இளையராஜாவை சாடியதையும் தேடி வாசியுங்கள். ராகங்களை கெடுத்துவிட்டார்கள் என்பது அவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. தற்போது சித்ஸ்ரீராம் இதே போல சினிமா பாடல் இரசிகர்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். அவர் அவ்வப்போது தனக்குப் பிடித்த பிரபல ஹிட் பாடல்களை தனது பாணியில் மேடைகளில் இம்ப்ரவைஸ் செய்கிறார். அது பல சினிமா பாடல் இரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த இரசனை மோதலின் உச்சகட்டம்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. காதல், கோபம், பக்தி என ஏதோ ஒரு உணர்வை வெளிப்படுத்தும் கணங்களாகத்தான் திரைப்பாடல்கள் உள்ளன. அது காட்சி வடிவத்தோடு சேர்த்து இரசிக்கப்படுவதால் பார்க்கிற ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தை அந்தப்பாடலுடன் இணைத்து இரசிக்கிறார்கள். அதனால் சில பாடல்கள் உணர்வுப்பூர்வமான கல்வெட்டுகளாக மனதில் பதிந்துவிடுகின்றன. கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலின் சிச்சுவேஷன் மிக மிக அபூர்வம். நான் நல்லதே நினைத்தேன், நல்லதே செய்தேன் ஆனாலும் எனக்கு ஏன் இந்த சோதனை, நான் ஏன் வஞ்சிக்கப்பட்டேன் என ஒவ்வொரு மனதிலும் ஒரு வேதனை இருக்கும். இந்தப் பாடல் அதனை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியது. மகாபாரதக் கதை, அது ஏற்படுத்தியிருக்கும் வீச்சு, உயிரை உருக்கி நடிக்கும் சிவாஜி, என்.டி.ஆர் போன்ற மகோன்னதக் கலைஞர்கள், கண்ணதாசன் என்கிற காவியக் கலைஞன், திரை இசை வழியாக மனித உணர்வுகளை மீட்டிய மெல்லிசை மன்னர்கள் என மீண்டும் அமையவே முடியாத உணர்வு மயமான கற்பனைக் கடல்களின் சங்கமம் அந்தப்பாடல். 50 வருடங்கள் கழிந்துவிட்டாலும் இன்றும் அந்தப்பாடல் பற்றிய அறிவிப்பு வரும்போதே அரங்கத்தில் கண்ணீர் துளிகளை பெருக வைக்கும் அதிர்வுகளை உள்ளடக்கியது அப்பாடல். தமிழ் நெஞ்சங்களில் இரகசியமாக உள்ளத்தை கசிய வைத்துக்கொண்டே இருக்கும் படைப்பு அது. அந்தப்பாடலை அப்படியே கையாள்வதே மிகவும் ரிஸ்க். ஆனால் அந்தப்பாடல் தரும் உணர்வுகளை எல்லாம் கழித்துவிட்டு, அதன் ராகத்தை மட்டும் விஸ்தரித்துப் பாடியதுதான் சித்ஸ்ரீராம் செய்த தவறு. பாடலின் ஆன்மாவை நீக்கிவிட்டு, ராகத்தை மட்டும் அலங்கரித்துப் பாடினால் அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும். மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு இசைஞானியின் அற்புதமான எளிமையான பாடல். இது தரும் சுகானுபவத்தை யுவன் போன்ற தற்கால இசை அமைப்பாளர்கள் கையாண்டால் எப்படி இருக்கும் என்பதை இளையராஜாவே மேடையில் பாடிக்காட்டினார். பாடலின் ஆன்மாவை உதறிவிட்டு ஒரு வார்தையைப் பிடித்துக் கொண்டு தொங்கும் சர்க்கஸ் வேலைகள்தான் எப்போதுமே இரசிக்கப்பட்டதில்லை. சித்ஸ்ரீராம் செய்ததும் தனது கிளாசிகல் அறிவை வெளிப்படுத்திய இசை சர்க்கஸ்தான். இதே பாடலை அவர் இந்த ஸ்வர சேட்டைகள் இல்லாமல் வேறு மேடையிலும் பாடியிருக்கிறார். யுடியூபில் தேடிப்பாருங்கள் அது நன்றாகத்தான் இருக்கின்றது. சஞ்சய் சுப்பிரமணியமும் சில நூறு எபிசோடுகளை செய்துவிட்டார். ஹிட்பாடல்களில் (பெரும்பாலும் இளையராஜா) பதித்து வைத்திருக்கும் கர்நாடக இசை நுணுக்கங்களை ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் சட்டென்று தொட்டுக் காட்டிவிடுகிறார். அது இரசிக்கப்படுகிறது. ஏனென்றால் அது காலத்துக்கு ஏற்ற துணுக்கு வகை. ஓ இந்த ராகத்தில் அந்தப்பாடலா என நாம் புருவம் உயர்த்தும்போது முடித்துவிடுகிறார். எப்போதுமே இருவேறு இசைக்கலப்புகளை கலந்து உருவாக்கும் பியூஷன் வகை இசைக்கு வரவேற்பை விட விமர்சனங்கள்தான் அதிகம். எம்.எஸ்.வி, இளையராஜா போன்றோர் கிளாசிகல் இசையை கெடுத்துவிட்டதாக எப்படி விமர்சிக்கப்பட்டார்களோ, அதே போல சித்ஸ்ரீராம் தற்போது சினிமா பாடலை கெடுத்துவிட்டதாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார். ஆன்லைன் சுதந்திரங்களால் அவருடைய உருவமும் கேலிக்குள்ளாகிறது. இது நெருடலானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவருடைய இசையை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் இரசனைகளைப் பொறுத்தது, ஆனால் உருவ கேலிகளும், அவருடைய இசை அறிவையே கேலிக்குள்ளாக்குவதும் ஏற்கத்தக்கதல்ல. ஓரிரு வருடங்களுக்கு முன் பரத்வாஜ் ரங்கன் சித்ஸ்ரீராமை ஒரு பேட்டி எடுத்திருந்தார். சித்ஸ்ரீராமுக்கு எம்.எஸ்.வி பற்றியும் அவரது பாடல்கள் பற்றியும் எதுவுமே தெரிந்திருக்கவில்லை, என்பதை அந்தப் பேட்டி உணர்த்தியது. அதற்குப் பின் ஒரு வீடியோவில் தனது சகோதரியுடன் இணைந்து இதே உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலுடன் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு ரிகர்சலில் ஈடுபட்டிருப்பதையும் பார்த்தேன். அதனால் 2Kவிற்கு முந்தைய திரைஇசையில் தனக்குப் பிடித்ததை அவர் இரசிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பதும், அதை தனது பாணியில் தனது இசை அறிவுடன் இணைத்து கொடுக்க முயற்சித்திருக்கிறார் என்பதும் புரிகிறது. ஆனால் அந்த முயற்சி கடுமையான விமர்சனங்களைக் கொடுத்துவிட்டது. இந்த விவகாரம் குறித்து அவரது ரியாக்ஷன் என்ன என்பது தெரியவில்லை. அவர் பதில் சொல்ல வேண்டும் என்பதும் அவசியமில்லை. ஆனால் நாம் கடந்த ஒரு வாரமாக அளவுக்கு அதிகமாகவே இது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதில் நமது இரசனை மேன்மை, இரசனைக் குறைவு என எல்லாமே வெளிப்பட்டிருக்கிறது. இந்தப்பதிவு இந்தப்பிரச்சனை குறித்து என்னுடைய புரிதல் மட்டுமே. கர்நாடக இசையா? திரை இசையா? ஃபியூஷனா எது மேன்மையானது என்பது பற்றிய கட்டுரை அல்ல. என்னைப் பொறுத்தவரையில் ஆன்மாவை வருடும் எதுவும் நல்ல இசையே. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா... சீர்காழியின் தெய்வீகக் குரலில் மீண்டும் ஒரு முறை இந்தப்பாடலில் கரைந்து கொள்கிறேன். - ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

Read 550 times
Login to post comments