Log in

Register



நமக்கு நினைவு தெரிந்து நாம் அனுபவித்த முதல் நெகிழ்ச்சியான விஷயத்தை எப்படி என்றென்றும் நம் நினைவில் அழியாது இருக்குமோ, அதேபோல் சினிமா ரசிகராக இருக்கும் ஒருவருக்கு முதன் முதலில் திரையில் பார்த்த திரைப்படமும், அந்த அனுபவமும் நீங்கா நினைவாக இருக்கும் .ஏன் இந்த இரண்டு விஷயத்தையும் ஒப்பிட்டு சொல்கிறேன் என்றால், ஒரு சினிமா ரசிகனாக நான் என் வாழ்வில் நடந்த சம்பவத்தைபோல ஏதாவது ஒரு படத்தில் பார்த்தாலோ, இல்லை படத்தில் பார்த்த எதாவது ஒரு சம்பவத்தை போல என் வாழ்வில் நடந்தாலோ அப்படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்.

அப்படி பார்க்கையில் விஜய் நடித்த திருமலை படம் தான் நான் முதன்முதலில் திரையில் பார்த்த திரைப்படம். அப்படத்தில் ஒரு காட்சியில் ரகுவரனும் கௌசல்யாவும் விஜய் மற்றும் அவரது நண்பர்களை வீட்டிற்கு சாப்பிட வருமாறு அழைப்பார்கள்.சாப்பிட்டு கொண்டிருக்கும் விஜய் திடீரென தனது நண்பர்களை பார்த்து "உங்களுக்கு கூட இது தோனலல ,வீட்டுல ஏதாவது விஷேசம் நடந்த ஒரு டிபன் பாக்ஸ்ல கேசரி பாயசம்னு கடைக்கு குடுத்துஅனுப்புவாங்களே தவிற வீட்டுக்கு கூப்பிட்டு யாரும் சோறு போட்டது கிடையாது, நானும் இதெல்லாம் ஆசைப்பட்டது இல்ல, இப்பதான் ஒரு வீட்டுல இழை போட்டு சாப்புடுறேன்”, என மனம் நெகிழ்ந்து கூறுவார்

இதே போல் ஒரு நெகழ்ச்சியான சம்பவம் என் வாழ்கையிலும் நடந்தது .இதுவரை 25 பிறந்தநாளை கடந்த எனக்கு ஒருமுறை கூட பிறந்தநாள் பரிசு கிடைத்தது கிடையாது நானும் அதை எதிர்பாக்கவில்லை. சமீபத்தில் பழகிய ஒரு நண்பர் கடந்த பிறந்தநாளன்று எனக்கு ஒரு கைக்கடிகாரம் பரிசாக குடுத்தார், அப்போது 20 வருடம் என்னுடன் பழகிய என் நண்பர்களும் கூட இருந்தனர். அப்போது நான் அவரிடம் 20 வருடம் கூட இருந்த நண்பர்களுக்கு கூட எனக்கு பரிசு குடுக்கனுன்னு தோணல, ஆனா ஆறு மாதம் பழகிய உங்களுக்கு தோணிருக்கு, இது என் வாழ்க்கையில் நான் பெற்ற முதல் பரிசு, ரொம்ப நன்றி என்றேன். முதன்முதலில் வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு போடுவதையும், பிறந்தநாள் பரிசு பெறுவதையும் ஒப்பிடுவது சரியா என்பது எனக்கு தெரியவில்லை, ஆனாலும் அதிலிருந்து நமக்கு ஏற்படும் நெகிழ்ச்சியான உணர்வு ஒன்றுதானே!

 - வினோத் குமார்

Published in Classic Movies