Log in

Register



”கொஞ்சம் வழுகலா கொடுங்க”

விசுக்கென்று தலை சீவிய இளநியை தந்துவிட்டு, ஒரு பேப்பர் ஸ்ட்ராவை செருக முயன்றார் இளநிக்காரர். திடீரென்று கொரானா ஞாபகம் வந்தவுடன் மின்னல் வேகத்தில் ஸ்ட்ராவை மறுத்துவிட்டு, நான் அப்படியே இளநியை உறிஞ்சினேன். அதற்குப்பின் அவர் இளநியைப் பிளந்து தேங்காயை எடுத்து தரும்போது, சீவிய அரிவாளில் கொரானோ இருந்திருக்குமோ என சந்தேகம் வந்துவிட்டது. இப்போது தேங்காயை சாப்பிடலாமா? வேண்டாமா? என ஒரு ஊசலாட்டம். அந்த இளம் தேங்காய் சாப்பிடு என்றது. கொரோனா பயம் வேண்டாம் என்றது. யோசனையுடன் தடுமாறிக்கொண்டிந்தபோது, அந்தப் பெண்ணின் குரல் கேட்டது.

”எனக்கும் ஸ்டிரா வேண்டாம். அவருக்கு மாதிரியே நல்லா சீவி தந்திடுங்க. நானும் அப்படியே சாப்பிடுறேன்” என்ற பெண்ணின் குரல் அன்றைய ரேவதியை ஞாபகப்படுத்தியது. தோற்றம் இன்றைய த்ரிஷா. பளிச்சென்று கருநீலம் மின்னிய சுடிதாரில், காலையில் அவள் சில்லென்று என்னைப் பார்த்த பார்வை இப்போது வரை ஞாபகம் இருக்கிறது. கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர், எதிரில் வந்த வாகனம், டிராபிக் மற்றும் கொரோனா உட்பட எல்லாமே மறந்துவிட்டது.

பிரேக்கிங் நியூஸ் - கருநீல சுடிதார் பெண்களிடம் கொரோனா பயத்தை பளிச்சென்று மறக்கவைக்கும் வசீகரப் புன்னகை இருக்கிறது.

- ISR Selvakumar

Published in ISR Selva speaking

இரவு பதினோரு மணிக்கு செக்கில் ஆட்டிய எண்ணையைத் தேடி ஒரு மளிகைக் கடைக்குள் நுழைந்தபோது...

வாசலில் இருந்த பூண்டு மூட்டைகளை தூக்கி வைத்தபடியே அவன் கேட்டான்.

”என்ன அண்ணே இப்படி ஆயிருச்சு? எல்லாத்தையும் மூடச் சொல்லிட்டா எப்படிண்ணே பொழைக்கிறது?”

”டேய்ய்ய்ய்... ரொம்ப ஃபீல் பண்ணாத. உன் டாஸ்மாக்கை மூடச் சொல்லல. அது தெறந்துதான் இருக்கு.”, என்றார் பில் போட்டுக்கொண்டிருந்தவன்(ர்)

நான் எண்ணையை எடுத்துக் கொண்டு பில் போட வந்துவிட்டேன்.

அவன் அடுத்த பூண்டு மூட்டையை தூக்க முடியாமல் தடுமாறிக் கொண்டே.. ”ஐயய்யோ நாளைக்கு கிடைக்காதுன்னு நெனச்சு எக்ஸ்ட்ராவா ரெண்டு குவார்ட்டரை வாங்கிட்டேனே.”, என்றான்.

எருமை, உன் வேட்டிக்குள்ள இருந்து பாட்டில் சத்தம் வந்தப்பவே நெனச்சேன். கஸ்டமர் இருக்கும்போது ஏண்டா இங்க வர்ற, உங்களுக்கு வேற என்ன சார்?

நான் பதில் சொல்லும் முன் இன்னொரு குரல் கேட்டது, அரை டிரவுசரில் தாடி வைத்த பாச்சுலர் பையன். அவன் எப்போது உள்ளே வந்தானோ...

”குமாரு (பெயரை மாற்றிவிட்டேன்), எனக்கு அவன் கிட்ட இருந்து ஒரு பாட்டிலை தேத்திக் குடு. வாங்க மறந்துட்டேன்”, என்றான்

வாசலிலிருந்தே, ”மேல பத்து ரூபா”, என்றான் பூண்டு மூட்டைக்காரன்.

உற்சாகமான இரவு வணக்கம் மக்காஸ்! குடி குடியைக் கெடுக்கும். கொரானாவை என்ன செய்யும் எனத் தெரியவில்லை. ஊரெல்லாம் டாஸ்மாக் கடை வழக்கம்போல இயங்கிக் கொண்டிருக்கிறது.

Published in ISR Selva speaking

ஆயில் புல்லிங் என்கிற புதிய பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. பல்வலிக்கு மாத்திரையை விழுங்குவதற்கு பதில் ஆயில் புல்லிங் பலன் தருமென்று என் சித்தப்பா சொன்னார். அவருடைய நல்லெண்ணை வாக்கு பலித்துவிட்டது. பல்வலியைக் காணோம். தற்போது வாயில் நல்லெண்ணையை நிரப்பிக் கொண்டு, அதை வெளியேற்றும் வரையில், ஏதாவது புத்தகத்தைப் புரட்டும் புதிய உபரிப்பழக்கம் வந்துவிட்டது.

இன்றைய புரட்டல் கணையாழிக் கதைகள் (1995-2000) என்கிற சிறுகதைத் தொகுப்பு. என்றைக்கு வாங்கினேன் எனத் தெரியவில்லை. இன்றைக்குத்தான் சிக்கியது. அதில் ”ஆளில்லாச் சந்துகளில் மரணக் குரலின் நடமாட்டம்” என்கிற கதைதான் முதலில் கண்ணில் பட்டது. தமயந்தி எழுதியது. ஆனால் கதையின் பெயர் அதிகாலை புத்தக ஆர்வத்துக்கு பொருந்தவில்லை. எனவே வேறொரு கதைக்குத் தாவினேன்.

நள்ளிரவில் தூக்கம் வராமல் டீக்கடைக்குப் போகும் குமார், அங்கே கடைசி பஸ்ஸை தவறவிட்டுவிட்டு காத்திருக்கும், ஊர்க்கார பெண்ணைக் காண்கிறான். கண்ணாடி ஜாக்கெட், மல்லிகைப் பூ, நீண்ட ஜடை என அவளைப் பற்றிய வர்ணனை நாயகன் குமாருக்குள்ளும், வாசிக்கும் எனக்குள்ளும், அந்தப் பெண்ணைப் பற்றி, ஒரே மாதிரியான எண்ணங்களைத்தான் உருவாக்கியதா எனத் தெரியவில்லை.

ஆனால் அவள் குமாருடன் அவனுடைய வீட்டில் அன்றைய இரவு தங்கிக் கொள்ளட்டுமா எனக் கேட்கும்போது எனக்கு சுவாரசியம் அதிகமாகிவிட்டது. இந்த வரியில் இதை வாசிக்கும் உங்களுக்கும் சுவாரசியம் வந்திருக்கும். இருவரும் வீட்டுக்கு நடந்து போகும் சொற்ப தூரத்தில் அந்தப் பெண், பழைய முதலாளியின் பெண் என்பதும், தற்போது நொடித்துப் போயிருக்கிறாள் என்பதையும் கதை நமக்குச் சொல்லிவிடுகிறது.

அவள் சூடியிருந்த மல்லிகைவாசம் இருவரும் ஒன்றாக வீட்டுக்குள் நுழைந்த மறுவினாடி குமாருக்கும் எனக்கும் இரட்டிப்பாகிவிட்டது. அந்த மல்லிகைவாசமும், இரவில் தனியாக ஒரு பெண்ணின் அருகாமையும் தன்னை புரட்டிப் போட்டுவிடக் கூடாது என்பதற்காக அவன் அவளுக்கு தன் அறையைக் கொடுத்துவிட்டு, விளக்கெறியும் வெளி அறையில் ஏதோ புத்தகத்தைப் புரட்டுகிறான். உறக்கம் வராமல் அவளும் தன் கணவன் தன்னை விட்டுப் போனதையும், வேறொரு பெண்ணுடன் வாழ்வதையும் அழுகையுடன் சொல்கிறாள்.

இறுதியில் உன்னைப் போல மனதில் களங்கம் இல்லாத ஒருவன் இருப்பதால்தான் நான் இன்னமும் உயிரோடு இருக்கிறேன் என்பாள். அத்துடன் கதை முடிகிறது. ”அவள் நல்லதொரு சகோதரியாய், தோழியாய் தெரிந்தாள்” என கடைசி வரி முடிகிறது.

கிட்டத்தட்ட இதே கருவில் ”சந்நியாசிகள்” என்றொரு சிறுகதை நான் எழுதியிருந்தேன். விகடனில் பிரசுரமானது. இதில் வரும் குமாருக்குப் பதில் அதில் சுரேஷ். பெயரில்லாத ஊர்காரப் பெண்ணுக்குப் பதில் அவனுடைய தோழி. இருவரும் தனியாக அவளுடைய வீட்டில் இருக்க நேர்கிறது. அப்போது அவர்களுக்கு இடையே ஏற்படும் டீன் ஏஜ் மனக்குழப்பங்கள் இப்படித்தான் கடைசி வரியில் முடிந்துவிடும். அதற்கு முந்தைய சில வரிகளில் அப்பெண்ணின் அண்ணன் வருவான். அவர்கள் தனியாக இருப்பதைப் பற்றி எந்த புருவ உயர்த்தலும் இல்லாமல் இயல்பாகப் பேசுவான். எந்த சந்தேகமும் இல்லாத அவனுடைய இயல்பு இவர்களுக்குத் தெளிவு தரும்.

இரண்டுமே இரு இளைஞர்களின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது. அந்தப் பெண்களின் கோணத்திலிருந்து யாராவது இதே கதைகளை எழுதினால் அது இன்னும் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். அதை பெண்கள் மட்டுமே எழுத முடியும் என நினைக்கிறேன்.

சொல்ல மறந்துவிட்டேனே.. நான் வாசித்த கதாசிரியரின் பெயர் ”பாப்லோ அறிவுக்குயில்”, கதையின் பெயர் ”தோழமை என்பது…”

உங்க அனுபவத்திலிருந்து நீங்க சொல்லுங்க… தோழமை என்பது என்ன…?

Published in ISR Selva speaking
Wednesday, 01 January 2020 06:41

2020 - Super start

புத்தாண்டு காலை இட்லி, கிச்சடி மற்றும் ரவா கேசரியுடன் துவங்கியிருக்கிறது.

முன்னும் பின்னும் ரெகே இசையுடன் மழை! Perfect Start!

See you all soon with my films, documentaries and other productions.

Cheers Makkas! 2020 is exciting!

Published in ISR Selva speaking

நீங்கள் யாரும் எங்களை பார்க்காமல் இருக்க முடியாது. அதை அந்த நான்கு பெண்கள் சொல்லவில்லை. அலட்சியமாக காற்றில் பறந்த அவர்களின் கூந்தல் சொன்னது.
மாநிறத்துக்கும் கொஞ்சம் கம்மி. ஆனால் பளீரென்று இருந்தார்கள்.
அரக்கு நிறத்தில் மிகச் சாதாரண புடவை. கூந்தலுடன் சேர்ந்து புடவையும் காற்றில் சிலுசிலுத்தது.
காது ஜிமிக்கி, வளையல் உட்பட எல்லாமே நால்வரும் ஒரே நிறத்தில் அணிந்திருந்தார்கள்.
கொலுசு அணிந்திருந்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் நடக்கும்போது ஒரு சங்கீதம் கேட்டது.
படு நெரிசலான புகை படர்ந்த ஹார்ன் அலறிய டிராபிக்.
ஆனால் அவர்களுக்கு கடல் ஒதுங்குவது போல வழி கிடைத்துக் கொண்டே இருந்தது.
அவர்கள் எதிர்சாலையை அடையும் வரை சிக்னல் கூட ஸ்தம்பித்து மாறாமல் நின்று கொண்டிருந்தது.

அழகு என்பது நிறத்திலோ, முகத்திலோ, ஆடையிலோ இல்லை. தன் தோற்றம் பற்றிய நம்பிக்கையிலும், துளைக்கும் பார்வைகளை பார்க்காமலே முறியடிப்பதிலும், அகத்தின் தெளிவை திசையெங்கும் சிதறடிப்பதிலும் இருக்கிறது என்பதை அந்தப் பெண்கள் நிரூபித்தார்கள்.

மீண்டும் அவர்களை நேரில் பார்த்தால் ஹலோ சொல்வேன். பெயர் கேட்பேன்.

என்னைப் போலவே அசோக் பில்லர் சிக்னலில் அவர்களை இரசித்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?

Published in ISR Selva speaking

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30