என் அப்பா ஐ.எஸ்.ஆருக்கு டைரி எழுதுகிற பழக்கம் இருந்தது. அதில் அவர் நடிக்கும் நாடகம், சினிமா, சூட்டிங் மற்றும் அன்றன்று நடந்த சம்பவங்களை சுருக்கமாக எழுதியிருப்பார். ஏதோ ஒரு பக்கத்தில் இயக்குநர் ஸ்ரீதர் பற்றி எழுதியிருந்தார். ஓ மஞ்சு படப்பிடிப்பாக இருக்கலாம். செட்டில் கவனிக்க முடியாத தூரத்தில் இருக்கும் துணை நடிகர்களைக் கூட ஸ்ரீதர் கவனித்தார். அவர்களின் ஆக்ஷன், ரியாக்ஷன்களை சரி செய்தார் என்று வியப்பாக எழுதியிருந்தார்.
ஓ மஞ்சு படத்தில் கேட்கும் திறன் குறைபாடு உள்ள போஸ்ட் மாஸ்டராக நடித்திருந்தார். தந்தி கொடுக்க வரும் தேங்காய் ஸ்ரீனிவாசனின் டைமிங், பாடி லாங்குவேஜ் மற்றும் ஏறி இறங்கும் உச்சரிப்பு அட்டகாசம். அவருடைய அத்தனை சேட்டைகளுக்கும் சிரிக்காமல் ரியாக்ஷன் கொடுத்திருப்பார். பிறகு தன் முறை வரும்போது அப்பாவியாக முகத்துடன் அவர் பேசுகிற வசனங்களும் அதற்கு தேங்காயின் ரியாக்ஷன்களும் அமர்க்களம். குறிப்பாக தேங்காய் தந்தியை தமிழில் சொல்லச் சொல்ல, அதற்கு என் அப்பா ஐ.ஸ்.ஆரின் இங்கிலீஷ் டிரான்ஸ்லேஷன்... சூப்பர்!
இன்று இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் நினைவு தினம். பல புதுமைகளை தமிழ்சினிமாவிற்கு அளித்த ஸ்ரீதரின் இயக்கத்தில் எங்கள் அப்பா ஐ.எஸ்.ஆரும் நடித்தார் என்பதில் எங்களுக்குகெல்லாம் பெருமையே.
பாமா விஜயம் படத்தில் எங்கள் அப்பாவுக்கு ஐ.எஸ்.ஆருக்கு நல்ல பெயர் கிடைக்க காரணம் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள்தான். படம் வெளியானபோது திருடனாக நடித்த காட்சிக்கு எக்கச்சக்க வரவேற்பு. கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளும் என் அப்பா ஐ.எஸ்.ஆரை பாராட்டி விமர்சனம் எழுதின. இத்தனைக்கும் அவர் நடித்தது ஒரே ஒரு காட்சிதான். இன்று கூட என் அப்பா நடிப்பில் சிலருக்கு உடனே ஞாபகம் வரும் காட்சி, பாமா விஜயம் காட்சிதான்.
பாமா விஜயம் படத்தின் இயக்குநர் கே.பாலச்சந்தர். அப்போதெல்லாம் எங்கள் அப்பா பாலச்சந்தரின் எல்லா படங்களிலும் இருப்பார். சௌகார், ஸ்ரீகாந்த், ஜெயந்தி, நாகேஷ் வரிசையில் என் அப்பாவும் பாலச்சந்தர் ரெகுலர்களில் ஒருவர். ராகினி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் மேடை நாடகம் போட்டதிலிருந்தே கே.பி க்கு என் அப்பா பழக்கம். அவருடைய அனைத்து நாடகங்களிலும் என் அப்பா நடித்திருக்கிறார். அதனால் பாமா விஜயம் படத்திலும் இருந்தார். ஆனால் ஒரே ஒரு காட்சிதான்.
பாமா விஜயம் படத்தின் விநியோக உரிமை ஜெமினி ஸ்டுடியோ திரு. எஸ்.எஸ்.வாசன். அதனால் படம் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறிய அவர் ஐ.எஸ்.ஆருக்கு கூடுதலாக குளோசப் காட்சிகள் வையுங்கள் என்று கூறியிருக்கிறார். அதனால் ஏற்கனவே தொகுக்கப்பட்ட காட்சியில் பல இடங்களில் என் அப்பாவுக்கு மட்டும் குளோசப் இணைக்கப்பட்டது. படம் வெளியானபின் வாசனின் கணிப்பு வென்றது. என் அப்பாவிற்கு நிறைய நல்ல பேரும், புது இரசிகர்களும் கிடைத்தார்கள். அதற்கு அந்த குளோசப் காட்சிகள் உதவியதாக என் அப்பா அடிக்கடி எஸ்.எஸ்.வாசன் பற்றி நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார். அதே படம் ஹிந்தியில் தயாரானபோது எஸ்.எஸ்.வாசனும், எஸ்.எஸ். பாலனும் இணைந்து இயக்கினார்கள். படத்தின் பெயர் ”தீன் பஹுரானியன்”.
ISR செல்வகுமார்
#ActorISR #HBDisr #BamaVijayam #ThiefScene #KBalachandar #SSVasan #Closeup #GeminiStudios
ஒரு மாணவன் சரியா பரிட்சை எழுதலன்னா, அடுத்த தடவை இன்னும் நல்லா படிச்சு எழுதுன்னு சொல்லலாம். அதை விட்டு உனக்கெல்லாம் எதுக்குடா பள்ளிக்கூடம் என்று திட்டினால் அந்த மாணவன் என்ன ஆவான். அவன் ஆரம்பிக்கும்போதே தோற்கடிக்கப்படுவான் அதுதான் ஒரு இயக்குநருக்கு நடக்கிறது. படம்பிடிக்கவில்லை என்றால் சுட்டிக்காட்டலாம், அடுத்த படம் நன்றாக எடுங்கள் என்று சொல்லலாம். ஆனால் உனக்கெல்லாம் எதற்கு சினிமா என்பது போல கடுமையாக விமர்சனம் செய்யாதீர்கள்.
அவன் எவ்வளவு கனவுடன் அந்தப்படத்தை இயக்கியிருப்பான். அவனை நம்பி எடிட்டர்கள், ஒளிப்பதிவாளர்கள், இணை/துணை இயக்குநர்கள் என்று எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் இந்தப்படம் வெற்றி அடையும். இதை வைத்து அடுத்து ஒரு படம் செய்யலாம் என கனவுடன் இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் தகர்ந்து போகிற அளவுக்கு ஏன் விமர்சனம் செய்கிறீர்கள். இயக்குநர்களின் குடும்பத்தைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா! வறுமை, கடன் என எத்தனையோ இடர்களைத் தாண்டி அந்த இயக்குநர்களின் குடும்பம் எவ்வளவு ஆசையுடனும், கனவுடனும் இருப்பார்கள்!!! என் அப்பாவின் படம், என் சகோதரனின் படம், என் கணவனின் படம் என்று எவ்வளவு பரவசத்துடன் உறவினர்களையும், நண்பர்களையும் படம் பார்க்க அழைத்திருப்பார்கள். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஏன் மிகக் கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள்.
உங்கள் கடுமையான விமர்சனங்கள் அவர்களின் குடும்பத்தினரை எந்த அளவுக்கு காயப்படுத்தும், வேதனைப்படுத்தும், நோகடிக்கும் என்பதையும் யோசித்துப்பாருங்கள். ”விமர்சனம் செய்ய உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுக்கலாமே”, என்று விஜய் ஆன்டனி ஒரு வெப் டிவிக்கு பேட்டியளித்திருந்தார். நான் அதைப் பார்த்துவிட்டு என் ஞாபகத்திலிருந்து எழுதியிருக்கிறேன். அவர் சொல்லிய வார்த்தைகள் மாறியிருக்கலாம். ஆனால் அவர் சொல்லிய கருத்து இதுதான். அவர் சொல்லிய விதமும், சொல்லிய கருத்தும் என் மனதில் அமர்ந்துவிட்டது. இயக்குநர் சேரன் கூட டிவிட்டரில் இது பற்றி பகிர்ந்திருந்தார்.
பிளாக் எழுதத் துவங்கிய பின் எல்லையில்லா எழுத்து சுதந்திரம் கிடைத்தது போல உணர்ந்தேன். அது தந்த மமதையில் என்னிடமும் இந்த கெட்ட குணம் இருந்தது. பட விமர்சனத்தையும் தாண்டி படமெடுத்தவர்களையும் விமர்சித்திருக்கிறேன். அப்போது பெயர் அறிவிக்காத நபர் (Anonymous) ஒருவர் ஒரு கமெண்டில் ”ஏன்யா இப்படி அவங்கள வறுக்கற..” என்று ஆரம்பித்து மிக நாசூக்காக எனது போக்கில் இருந்த தவறை சுட்டிக் காட்டினார். நல்லவேளையாக அவர் சொன்னதை நான் புரிந்து கொண்டேன். உடனே அந்த வலைப்பதிவையும், அதற்கு முன் எழுதிய பல பதிவுகளையும் நீக்கிவிட்டேன். அந்த Anonymous நண்பருக்கு நன்றி. அரசியல் பற்றிய பதிவுகளிலும் கேலி என்ற பெயரில் எல்லை தாண்டுகிறோம் எனத் தோன்றிவிட்டது. பின்னர் அவற்றையும் குறைத்து பின்னர் முற்றிலும் தவிர்த்துவிட்டேன். இந்த இடத்தில் எனது மீறலை சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றி!
திரைப்பிரலங்கள் எப்போதுமே நமக்கு ஒரு Soft Targetதான். வயதில் மூத்த பாடகர்கள், இயக்குநர்கள் நடிகர்களைக் கூட நாம் சர்வசாதாரணமாக அவன் இவன், அவள் இவள் என்றுதான் பேசுகிறோம். அரசியல் பிரபலங்களையும் அவ்வாறே குறிப்பிடுகிறோம். அவர்களை மதிப்புடன் குறிப்பிடுவது நமக்கும் மதிப்பு கூட்டும் ஒரு செயல். ஆனால் இந்த நாகரீகம் ஏனோ நமக்குப் புரிவதே இல்லை. அவர்களின் புகழுக்கும், செல்வத்துக்கும் நாம்தான் என்கிற ஆழ்மன செருக்கு நம் எல்லோரிடமும் இருப்பதாக நான் கருதுகிறேன். அதுதான் நிதர்சனம் என்று சிலர் வாதிடுகிறார்கள். அப்படியானால் நாம் நிராகரித்த எத்தனையோ திறமைசாலிகள் திரை உலகில் இருக்கிறார்கள். அவர்களுடைய வாய்ப்பு இன்மைக்கும், வறுமைக்கும், அல்லலுக்கும் நாம்தான் காரணம் என்று சொல்லலாமா? இதை நாம் ஒப்புக் கொள்வோமா?
திரையுலகினரின் வெற்றிக்கு நாம்தான் காரணம் என்றால் தோல்விக்கும் நாம்தான் காரணமா? இது போல பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே போகலாம். அது நாம் வாழும் சமூகம் பற்றிய உளவியல் ரீதியான ஒரு கட்டுரையாக நீண்டுகொண்டே போகும். ஆனால் அதைப்பற்றி நாம் பேசித்தான் ஆக வேண்டும். அதற்கு இது ஒரு துவக்கமாக இருக்கட்டும். விஜய் ஆன்டனி மிகச் சரியாக உளவியல் ரீதியான கேள்விகளை எழுப்பி துவக்கி வைத்திருக்கிறார். அவர் வார்த்தைகளில் இருந்த உண்மையும், வலியும், தெளிவும் என்னை சிந்திக்கத் தூண்டியது என்னைப் போலவே மற்றவர்களும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று இதை வாசிக்கும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கும் இந்த நிலையில் நம்பிக்கை தரும் மனிதர்களும், வார்த்தைகளும், செயல்களும்தான் சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தேவையாக இருக்கிறது. எனவே நம்பிக்கை தரும் சூழலை உருவாக்குவோம். அதற்காக மீண்டும் ஒரு முறை நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். திரை விமர்சனம் என்ற பெயரில் நாம் செய்வது சரியா?
ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்
#VijayAntony #FilmReview #ISRselvakumar #ISRventures
ஏ.ஆர்.இரகுமான் இசையமைத்துள்ள கலாட்டா கல்யாணம் (#AtrangiRe) படத்தில் ரோஹிணி ஒரு பாடல் எழுதியுள்ளார். பலரும் கவனிக்க மறந்துவிட்டோம். அவரைப் போன்ற சில பெண் பாடலாசிரியர்களை #CinemaTicket இணையதளம் பட்டியலிட்டுள்ளது. எனக்குப் பிடித்த தமயந்தியும், ரோஹிணியும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். வேறு யாராவது இந்தப் பட்டியலில் சேர்க்கக் கூடியவர்கள் இருக்கிறார்களா? ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்
சித் ஸ்ரீராம் ஏன் விமர்சிக்கப்படுகிறார்? இதற்கான பதில் ஏன் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலுக்கு உருகுகிறோம் என்பதில் இருக்கிறது. சில திரை இசைப் பாடல்களுக்கு, சினிமாவையும் தாண்டி நிலைத்து நிற்கும் Cult Status வந்துவிடும். உள்ளத்தில் நல்ல உள்ளம் அப்படி ஒரு பாடல். பாடலை பாடுபவர், இசைப்பவர், இரசிப்பவர் என அனைவரையும் ஒரு புள்ளியில் இணைத்து நெகிழ வைக்கும் தன்மை இந்தப் பாடலுக்கு உண்டு. சித்ஸ்ரீராமும் அப்படி நெகிழ்ந்து போன ஒரு இரசிகர்களில் ஒருவர்தான். என்னைப் போன்ற சாதாரண இரசிகன், ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அது தரும் உணர்வுகளால் நெகிழ்கிறோம். சித்ஸ்ரீராம் ஒரு பாடகராகவும் இருப்பதால் ஒவ்வொரு முறையும் அதன் இசை நுணுக்கங்களையும் சேர்த்து இரசிப்பவராக இருக்கிறார். நீங்களோ நானோ அந்தப் பாடலை என் நண்பனுக்கோ, மகளுக்கோ பரிந்துரைக்கிறோம், திரும்பக் கேட்கிறோம். சித்ஸ்ரீராம் அந்தப்பாடல் வழியாக தனது கர்நாடக இசை அறிவை வெளிப்படுத்த முயற்சி செய்கிறார். இதுதான் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலின் இரசிகராக நமக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம். ஆனால் இங்குதான் சிக்கல் வருகிறது. எம்.எஸ்.வி, இளையராஜா போன்ற திரை இசை மேதைகள் கிளாசிகல் இசையை கையாண்ட விதத்திற்காக சில நேரம் கர்நாடக இசை இரசிகர்களால் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ராகத்தை கெடுத்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள். இப்போது நாம் கொண்டாடும் கர்ணன் படப்பாடல்கள் வெளிவந்தபோது மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணையின் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். சிந்து பைரவிக்காக அதே போல இளையராஜாவை சாடியதையும் தேடி வாசியுங்கள். ராகங்களை கெடுத்துவிட்டார்கள் என்பது அவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. தற்போது சித்ஸ்ரீராம் இதே போல சினிமா பாடல் இரசிகர்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். அவர் அவ்வப்போது தனக்குப் பிடித்த பிரபல ஹிட் பாடல்களை தனது பாணியில் மேடைகளில் இம்ப்ரவைஸ் செய்கிறார். அது பல சினிமா பாடல் இரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த இரசனை மோதலின் உச்சகட்டம்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. காதல், கோபம், பக்தி என ஏதோ ஒரு உணர்வை வெளிப்படுத்தும் கணங்களாகத்தான் திரைப்பாடல்கள் உள்ளன. அது காட்சி வடிவத்தோடு சேர்த்து இரசிக்கப்படுவதால் பார்க்கிற ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தை அந்தப்பாடலுடன் இணைத்து இரசிக்கிறார்கள். அதனால் சில பாடல்கள் உணர்வுப்பூர்வமான கல்வெட்டுகளாக மனதில் பதிந்துவிடுகின்றன. கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலின் சிச்சுவேஷன் மிக மிக அபூர்வம். நான் நல்லதே நினைத்தேன், நல்லதே செய்தேன் ஆனாலும் எனக்கு ஏன் இந்த சோதனை, நான் ஏன் வஞ்சிக்கப்பட்டேன் என ஒவ்வொரு மனதிலும் ஒரு வேதனை இருக்கும். இந்தப் பாடல் அதனை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியது. மகாபாரதக் கதை, அது ஏற்படுத்தியிருக்கும் வீச்சு, உயிரை உருக்கி நடிக்கும் சிவாஜி, என்.டி.ஆர் போன்ற மகோன்னதக் கலைஞர்கள், கண்ணதாசன் என்கிற காவியக் கலைஞன், திரை இசை வழியாக மனித உணர்வுகளை மீட்டிய மெல்லிசை மன்னர்கள் என மீண்டும் அமையவே முடியாத உணர்வு மயமான கற்பனைக் கடல்களின் சங்கமம் அந்தப்பாடல். 50 வருடங்கள் கழிந்துவிட்டாலும் இன்றும் அந்தப்பாடல் பற்றிய அறிவிப்பு வரும்போதே அரங்கத்தில் கண்ணீர் துளிகளை பெருக வைக்கும் அதிர்வுகளை உள்ளடக்கியது அப்பாடல். தமிழ் நெஞ்சங்களில் இரகசியமாக உள்ளத்தை கசிய வைத்துக்கொண்டே இருக்கும் படைப்பு அது. அந்தப்பாடலை அப்படியே கையாள்வதே மிகவும் ரிஸ்க். ஆனால் அந்தப்பாடல் தரும் உணர்வுகளை எல்லாம் கழித்துவிட்டு, அதன் ராகத்தை மட்டும் விஸ்தரித்துப் பாடியதுதான் சித்ஸ்ரீராம் செய்த தவறு. பாடலின் ஆன்மாவை நீக்கிவிட்டு, ராகத்தை மட்டும் அலங்கரித்துப் பாடினால் அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும். மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு இசைஞானியின் அற்புதமான எளிமையான பாடல். இது தரும் சுகானுபவத்தை யுவன் போன்ற தற்கால இசை அமைப்பாளர்கள் கையாண்டால் எப்படி இருக்கும் என்பதை இளையராஜாவே மேடையில் பாடிக்காட்டினார். பாடலின் ஆன்மாவை உதறிவிட்டு ஒரு வார்தையைப் பிடித்துக் கொண்டு தொங்கும் சர்க்கஸ் வேலைகள்தான் எப்போதுமே இரசிக்கப்பட்டதில்லை. சித்ஸ்ரீராம் செய்ததும் தனது கிளாசிகல் அறிவை வெளிப்படுத்திய இசை சர்க்கஸ்தான். இதே பாடலை அவர் இந்த ஸ்வர சேட்டைகள் இல்லாமல் வேறு மேடையிலும் பாடியிருக்கிறார். யுடியூபில் தேடிப்பாருங்கள் அது நன்றாகத்தான் இருக்கின்றது. சஞ்சய் சுப்பிரமணியமும் சில நூறு எபிசோடுகளை செய்துவிட்டார். ஹிட்பாடல்களில் (பெரும்பாலும் இளையராஜா) பதித்து வைத்திருக்கும் கர்நாடக இசை நுணுக்கங்களை ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் சட்டென்று தொட்டுக் காட்டிவிடுகிறார். அது இரசிக்கப்படுகிறது. ஏனென்றால் அது காலத்துக்கு ஏற்ற துணுக்கு வகை. ஓ இந்த ராகத்தில் அந்தப்பாடலா என நாம் புருவம் உயர்த்தும்போது முடித்துவிடுகிறார். எப்போதுமே இருவேறு இசைக்கலப்புகளை கலந்து உருவாக்கும் பியூஷன் வகை இசைக்கு வரவேற்பை விட விமர்சனங்கள்தான் அதிகம். எம்.எஸ்.வி, இளையராஜா போன்றோர் கிளாசிகல் இசையை கெடுத்துவிட்டதாக எப்படி விமர்சிக்கப்பட்டார்களோ, அதே போல சித்ஸ்ரீராம் தற்போது சினிமா பாடலை கெடுத்துவிட்டதாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார். ஆன்லைன் சுதந்திரங்களால் அவருடைய உருவமும் கேலிக்குள்ளாகிறது. இது நெருடலானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவருடைய இசையை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் இரசனைகளைப் பொறுத்தது, ஆனால் உருவ கேலிகளும், அவருடைய இசை அறிவையே கேலிக்குள்ளாக்குவதும் ஏற்கத்தக்கதல்ல. ஓரிரு வருடங்களுக்கு முன் பரத்வாஜ் ரங்கன் சித்ஸ்ரீராமை ஒரு பேட்டி எடுத்திருந்தார். சித்ஸ்ரீராமுக்கு எம்.எஸ்.வி பற்றியும் அவரது பாடல்கள் பற்றியும் எதுவுமே தெரிந்திருக்கவில்லை, என்பதை அந்தப் பேட்டி உணர்த்தியது. அதற்குப் பின் ஒரு வீடியோவில் தனது சகோதரியுடன் இணைந்து இதே உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலுடன் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு ரிகர்சலில் ஈடுபட்டிருப்பதையும் பார்த்தேன். அதனால் 2Kவிற்கு முந்தைய திரைஇசையில் தனக்குப் பிடித்ததை அவர் இரசிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பதும், அதை தனது பாணியில் தனது இசை அறிவுடன் இணைத்து கொடுக்க முயற்சித்திருக்கிறார் என்பதும் புரிகிறது. ஆனால் அந்த முயற்சி கடுமையான விமர்சனங்களைக் கொடுத்துவிட்டது. இந்த விவகாரம் குறித்து அவரது ரியாக்ஷன் என்ன என்பது தெரியவில்லை. அவர் பதில் சொல்ல வேண்டும் என்பதும் அவசியமில்லை. ஆனால் நாம் கடந்த ஒரு வாரமாக அளவுக்கு அதிகமாகவே இது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதில் நமது இரசனை மேன்மை, இரசனைக் குறைவு என எல்லாமே வெளிப்பட்டிருக்கிறது. இந்தப்பதிவு இந்தப்பிரச்சனை குறித்து என்னுடைய புரிதல் மட்டுமே. கர்நாடக இசையா? திரை இசையா? ஃபியூஷனா எது மேன்மையானது என்பது பற்றிய கட்டுரை அல்ல. என்னைப் பொறுத்தவரையில் ஆன்மாவை வருடும் எதுவும் நல்ல இசையே. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா... சீர்காழியின் தெய்வீகக் குரலில் மீண்டும் ஒரு முறை இந்தப்பாடலில் கரைந்து கொள்கிறேன். - ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்
Rohini! Great actor, director, dancer, thinker and social activist. I'm happy to say that I've directed a Talk show anchored by her. The pre and post discussion of the was full of thought provoking. Today is her birthday. Have a great birthday Rohini. Want to work with you again.
மனம் திரும்புதே என்ற நிகழ்ச்சிக்காக இயக்குநர் ரஞ்சித்தை சந்தித்தபோது நிகழ்ந்தவை. இயக்குநர் ரஞ்சித். சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட படங்களை இயக்கியவர்(அட்டகத்தி, மெட்ராஸ்). அவரிடம் சினிமா உலகிற்கான எந்தப்பூச்சும் இல்லை. ”இன்னா சார் பேசணும்”, பேச்சில் அவ்வப்போது மெட்ராஸ் தமிழ். ”பொதுவா நான் டிவின்னாலே அவாய்ட் பண்ணிடுவேன் சார். இயல்பாவே பேச முடியல. நடிக்க வேண்டியதிருக்கு”, என்றார். நீங்கள் தயங்க வேண்டியதில்லை. இந்த நிகழ்ச்சி முழுவதும் நீங்கள் நீங்களாகவே இருப்பீங்க. இது வெறும் நிகழ்ச்சி அல்ல. அனுபவம்”, என்று இளக வைக்க முயற்சித்தேன். இரண்டு மணி நேரம் கழித்து படப்பிடிப்பு முடிந்ததும் ”ரொம்ப தேங்ஸ். பயந்துகிட்டே வந்தேன். ஆனா சூப்பரா பண்ட்டீங்க” என்றார். அதைச் சொல்லும்போது அவரும் அவருடைய தோளில் இருந்த குழந்தையும் ஜெம்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர் காதலித்து மணந்த மனைவி அதனை இரசித்துக்கொண்டிருந்தார். உடனிருந்த நண்பர்களும், சகோதரர்களும், பெற்றோர்களும் அப்போதுதான் முதல்முறையாக பார்ப்பது போல மலர்ச்சியாக இன்னமும் பேசிக்கொண்டே இருந்தார்கள். குழந்தை தன் மழலைக்குரலில் டாட்டா என்றது. டாட்டா சொல்லும்போது கைகளில் ஒட்டியிருந்த ஜெம்ஸ் மிட்டாய்போல இனிய நினைவுகளை சுமந்து கொண்டு விடைபெற்றார் ரஞ்சித். வாழ்க ரஞ்சித்தும் அவர் குடும்பத்தினரும். மனம் திரும்புதே (6/12/2014) #manamthirumbuthey #puthuyugamtv ரஞ்சித்தின் பிறந்தநாளில் இந்நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி!
சினிமா தொடர்பாக டெக்ஸ்ட் புக் எழுதும் பணி. தகவல் திரட்டுக்காக பல புத்தகங்களை வாசிக்கிறேன். அதில் நம் ஓவியர் ஜீவா எழுதிய தேசிய விருது பெற்ற திரைச்சீலை புத்தகத்தை கடந்த ஒரு வாரமாக திரும்பத்திரும்ப வாசிக்கிறேன். தனிக்காரணம் ஏதுமில்லை. தினமும் ஏதோ ஒரு பக்கத்தை திறந்து அதிலிருந்து வாசிக்கிறேன். எந்தப்பக்கத்தை திறந்தாலும் தமிழ்சினிமாவின் அரை நூற்றாண்டு வரலாறு துளித்துளியாக வெளிப்பட்டு எனக்குள் இறங்கிக் கொண்டே இருக்கிறது.
தமிழ்சினிமாவின் (தட்டி, பிட் நோட்டீஸ், போஸ்டர், கட்அவுட், மோஷன் போஸ்டர், டீசர், டிரையலர் உள்ளிட்ட) விளம்பர உத்திகளை டாக்குமெண்டரியாக பதிவு செய்யலாம் என ஒரு யோசனை இருந்தது. முதல் செயலாக ஜீவாவைத்தான் சந்தித்தேன். அவருடைய மிகப்பிரபலமான சிறிய அலுவலகத்தில் நோட்டுப்புத்தகத்தில் எடுத்த குறிப்புகள் அப்படியே இருக்கின்றன. கொரோனாவின் திடீர் வருகையால் அந்த டாகுமெண்டரியை அப்படியே நிறுத்திவிட்டேன். ஜீவாவின் திரைச்சீலையை வாசிக்கும்போதெல்லாம், டாகுமெண்டரியை எப்படியாவது முடித்துவிடலாமே என்கிற எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
#யாதெனக்கேட்டேன் ரிலீசாகும்போது ”தமிழ்சினிமாவில் விளம்பர உத்திகள்” ஆவணப்படத்தின் முதல்கட்டப் பணிகளையாவது நிறைவு செய்ய ஆசை.
ஆவணங்களாக்கும் முயற்சிகளைப் பொறுத்தவரை கடற்கரய் எனக்கு எப்போதுமே உந்து சக்தி. எடுத்தால் முடித்துவிடுவார். அவருடைய பணிகள் என்னை அசர வைக்கின்றன. இன்று ஹிந்துவில் அவருடைய ”மணிக்கொடி சினிமா” பற்றிய புத்தகம் பற்றி வெளியாகியிருக்கிறது. அதை வாசித்ததும் வேகம் கூடியிருக்கிறது. எனவே இன்றே ஆவணப்பட வேலை துவங்குகிறது.
சியர்ஸ் மக்காஸ்! உற்சாகமான வணக்கம்!
கமல் சண்டைக்காட்சிகளிலும் சகலகலா வல்லவன்தான். அதனால் அவர் கௌதம் மேனனுடன் இணைந்தபோது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றார்போல ஒரு மாஸ் சண்டைக்காட்சியும் வேட்டையாடு விளையாடு படத்தில் அமைந்தது. விசில் பறந்த அந்த சண்டைக்காட்சியை இங்கு கிளிக் செய்து பாருங்கள்
ஒரு குரல் வங்கியை உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம். கொரோனா லாக்டவுனால் அதற்கான நேரம் கிடைத்தது. வாய்ஸ் ஜிம் என்கிற பெயரில் ஒரு ஆன்லைன் பயிற்சித் திட்டம் ஆரம்பித்து நடத்தி வருகிறேன். நாடக ஆசிரியர், பயிற்சியாளர் பகு, பல மொழிப்பாடகி, குழந்தைகள் நாடக ஆசிரியை சாரு, பழங்குடியினர் இசைக்கருவிக் கலைஞர், ஆராய்ச்சியாளர் லியோன் ஆகியோர் தலைமையில் இந்த வாய்ஸ்ஜிம் வகுப்பு நடக்கிறது.
இதில் Learn by Doing என்கிற முறையை பயன்படுத்துகிறோம். ஒரு கதையைக் கொடுத்து அதை வாசிக்கச் சொல்லி பிறகு நடிக்கச் சொல்லி திருத்தங்கள் செய்வது அதில் ஒரு பகுதி. வகுப்பு முடிந்ததும் அவர்களை விட்டுவிடாமல் தொடர்ந்து அவர்களை வைத்து ஆடியோ புத்தகம் உருவாக்குவது என்பது நோக்கம்.

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்புக்காக ஆன்லைனிலேயே குரல் பதிவு நடக்கிறது. இதற்காக நாங்களே ஒரு வீடியோ கான்ஃபரன்சிங் செயலியை உருவாக்கிவிட்டோம். பயிற்சியும், ஆடியோ பதிவும் அதிலேயே நடக்கிறது.

இந்த பரிசோதனையில் ஈடுபடுவது முழுக்க முழுக்க மாணவர்களே என்பதால், அவர்களுக்கு குரல் பயிற்சி மட்டுமில்லாமல், ரிமோட் ரெக்கார்டிங் முறையும் கொஞ்சம் கொஞ்சமாக பழகிவிடுகிறது. எதிர்காலத்தில் இது சர்வசாதாரணமாகிவிடும் என்பதால் இப்போதே அவர்களை தயார் செய்வதில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! இன்னும் ஒருவருடத்தில் நல்ல குரல் வளத்துடன், நவீன டெக்னாலஜியும் அறிந்த திறமைசாலிகளை நாங்கள் தமிழகத்திற்கு வழங்கப்போகிறோம். தொலைக்காட்சி, வானொலி, யூ டியூப், கலை, இலக்கியம், அரசியல் மற்றும் அலுவலக மேடைகளில் அவர்களின் குரல் ஒலிக்கும்.

சிறுகதை உலகில் நவீனத்தைப் புகுத்திய ”புதுமைப்பித்தன்” எழுதிய ”கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” என்கிற கதையை ரிமோட் ரெக்கார்டிங் முறையில் பதிவு செய்யும் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. ஒலிப்பதிவு நிறைவடைந்ததும் எடிட்டிங். அதையும் மாணவர்களை வைத்தே செய்யும் திட்டங்களும் இருக்கிறது. அதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டவுன் முழுக்க முழுக்க எங்கள் வாய்ஸ்ஜிம் மாணவர்களின் குரல் வண்ணத்தில் உருவான ஆடியோ புத்தங்களை நாங்கள் ரிலீஸ் செய்வோம்.

இதற்கான டெக்னாலஜி தேவைகளையும், ஒருங்கிணைக்கும் வேலைகளையும் தயாரிப்பையும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் என்கிற எங்கள் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.