Print this page
Sunday, 06 February 2022 14:42

லதா மங்கேஷ்கர் - இளையராஜா - ஏ.ஆர்.இரகுமான் - சிவாஜி - நௌஷாத் பற்றி 12 தகவல்கள்

Written by ISR SELVAKUMAR
Rate this item
(0 votes)

நமது இந்தியாவை பாரத மாதா என்று ஒரு தாய்க்கு நிகராக நாம் கூறுகிறோம். அந்த பாரத மாதாவின் குரலாக இருந்தவர்தான் லதா மங்கேஷ்கர். 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் எனும் “இசைக் குயில்” செம் மொழியான தமிழ் மொழியிலும் பாடியுள்ளார்.


லதா மங்கேஷ்கர் என்ற பெயரை உச்சரித்ததுமே தமிழ் திரை இசை இரசிகர்களின் மனதில் வளையோசை கல கல கலவென என்கிற இளையராஜாவின் கீதம் ஒலிக்கத் துவங்கிவிடும். காதலர்களின் தேசிய கீதமாக அறியப்படும் இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1988. ”வளையோசை கலகல” பாடலுக்கு முன்பு தமிழ் இரசிகர்கள் கொண்டாடிய லதா மங்கேஷ்கர் பாடல் எதுவென்றால் ”ஆராரோ ஓ ஆரோரோ” என்கிற பாடல்தான். பிரபு நடித்த ஆனந்த் என்கிற இந்தப்படத்துக்கும் இசையமைத்தது இசைஞானிதான்.


லதா மங்கேஷ்கர் ”ஆராரோ” பாடலைப்பாட மிக முக்கியமான காரணம் யார் தெரியுமா? நடிகர் திலகம் சிவாஜி கணேசன். லதா மங்கேஷ்கர் நடிகர் திலகத்தை தன் உடன் பிறவா அண்ணனாக நினைத்து அன்புகாட்டியவர். அவர் மேல் உள்ள பாசம் காரணமாக சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த ஆனந்த் படத்தில் பாட உடனே ஒப்புக் கொண்டார்.
மும்பையில் பாவமன்னிப்பு படத்தை பார்த்த லதா மங்கேஷ்கர் உடனே மெட்ராஸ் வந்துவிட்டார். நேரே சிவாஜியின் வீட்டுக்குச் சென்று தனது சகோதரி மற்றும் குடும்பத்தாருடன் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றிருக்கிறார். அதுதான் சிவாஜியுடன் அவரது முதல் சந்திப்பு.


நடிகர் திலகம் பார்ப்பதற்கு லதா மங்கேஷ்கரின் தந்தை தீனநாத் மங்கேஷ்கர் போலவே இருந்தாராம். அதனால் தன் தந்தையை நினைவுபடுத்திய நடிகர்திலகத்தை தனது ராக்கி சகோதரனாக ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்தினார் அவர். லதா மங்கேஷ்கர் குடும்பமும், நடிகர் திலகம் குடும்பமும் கிட்டத்தட்ட ஒரே குடும்பமாக மாறிப்போனார்கள். நடிகர் திலகம் மறைந்த பின் அவர் நினைவாக, அவர் பெயரிலேயே ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார் லதா. மும்பையில் இன்னமும் அந்த ஆம்புலன்ஸ் சேவை தொடர்கிறது.


1942 ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கர் தன்னுடைய முதல் திரை இசைப்பாடலைப் பாடினார். அது “கிதி ஹசால்” என்ற மராத்திப் பாடல். தமிழ் சினிமாபை் பொறுத்தவரை 1952ல் ஆண் (முரட்டு அடியாள்) என்ற ஹிந்தி டப்பிங் படத்தில் 4 பாடல்களைப் பாடியிருந்தார். தமிழ் சினிமாவில் அவரது குரல் அப்போதுதான் முதன் முதலாக ஒலித்தது.
1955-ம் ஆண்டு ‘உரன் கடோலா’ என்ற இந்திப் படத்தின் தமிழ் பதிப்பான ”வான ரதம்” வெளியானது. அதில் நௌஷத் இசையில் ”எந்தன் கண்ணாளன்” என்ற பாடலை பாடியிருந்தார். ஆனால் இவை எல்லாமே ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட பாடல்கள். எனவே அவர் பாடிய முதல் நேரடி தமிழ் பாடல் என்றால் இசைஞானியின் ஆராரோ பாடல்தான்!


என் புள்ளை பிரபுவுக்காக பாடுகிறேன் என்று பணம் எதுவும் வாங்காமல் அவர் பாடிக்கொடுத்த பாடல்தான் ஆராரோ பாடல். அவர் பாடிய ஆனந்த் , சத்யா, என் ஜீவன் பாடுது, கண்ணுக்கொரு வண்ணக்கிளி உள்ளிட்ட படங்கள் அனைத்துக்கும் இசை இளையராஜா. தமிழில் வேறு எவர் இசையிலும் லதா மங்கேஷ்கர் பாடியதில்லை.


1942ல் பாடத் துவங்கிய இசைக் குயில் 1998ல் இசைப்புயல் ஏ.ஆர்.இரகுமானுடன் தில் சே என்ற இந்திப் படத்துக்காக கை கோர்த்தார். நெஞ்சினிலே நெஞ்சினிலே என்று இசையரசி ஜானகி பாடிய பாடலை இந்தியில் ஜியா ஜிலே என்று லதா மங்கேஷ்கர் பாடினார்.


ரங்தே பசந்தி படத்தில் லதா மங்கேஷ்கருடன் இணைந்து ஏ.ஆர்.இரகுமான் பாடியுள்ள லுக்கா சுப்பி என்கிற பாடலைக் கேட்டால் நம்மையும் அறியாமல் கண்களில் நீர் கசியும். ஏ.ஆர்.இரகுமானுக்கும் அவருக்குமான உறவு தாய்க்கும், மகனுக்கும் உள்ள உறவு போன்றது.

என் தந்தையின் அறையில் லதா மங்கேஷ்கரின் புகைப்படம் இருந்தது. கண்விழிக்கும்போதே லதா மங்கேஷ்கர் முகத்தைப் பார்த்துவிட்டுதான் அந்த நாளை துவக்குவார் என் அப்பா, என்று தன் தந்தை சேகர் பற்றி நினைவு கூர்கிறார் ரகுமான். அதை பார்த்துப் பார்த்து நான் சிறுவனான இருந்தபோதே எனக்குள்ளும் லதாஜியின் இசை நிரம்பிவிட்டது என ரகுமான் ஒரு முறை குறிப்பிட்டார்.

ரகுமான் தன்னுடைய இரங்கல் செய்தியில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார். நான் லதாஜியை சந்திக்கும் வரை, பாடுவதற்காக அதிகம் மெனக்கெட்டதில்லை. மேடை ஏறியதும் பாடி விடுவேன். அவ்வளவுதான். ஆனால் லதாஜியுடன் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தவுடன் நான் மாறிவிட்டேன். தான் பாட வேண்டிய பாடல்களை லதாஜி மேடை ஏறும்வரை பயிற்சி செய்து கொண்டே இருந்தார். பல்லாயிரக் கணக்கான பாடல்கள் பாடிய பின்னும், பயிற்சிக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார்.

அவர் பாடத் துவங்கிய காலத்தில், நௌஷத் அவர்கள், ஒவ்வொரு பாடலுக்கும் 10 நாட்கள் தொடர்ந்து பயிற்சி கொடுப்பாராம். அதை இன்றும் கடைப்பிடிக்கிறார் லதாஜி. நானும் இப்போது அதை கடைப்பிடிக்கிறேன். ஒவ்வொரு கச்சேரிக்கு முன்பும் தம்பூரா வைத்து பயிற்சி செய்கிறேன் என்றார் ரகுமான்.

லதா மங்கேஷ்கரின் சாதனைகளிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். எதைச் செய்தாலும் அதன் ஆழத்தையும், ஆன்மாவையும் வெளிக்கொணர வேண்டுமென்றால் சலிக்காமல் ஒரு முதல்முறை மாணவன் போல பயிற்சி எடுத்துக் கொண்டே இரு என்பதுதான்.
God Bless All!
 
#RIPLataMangeshkar
 
- ISR SELVAKUMAR
Read 548 times Last modified on Sunday, 06 February 2022 14:51

Related items

Login to post comments