Log in

Register



Monday, 27 December 2021 18:20

Modern Love - விமர்சனம்

Written by ISR Selvakumar
Rate this item
(0 votes)

Modern Love கொரோனாவின் முதல் அச்சுறுத்தலின் போது பார்க்க ஆரம்பித்தேன். முதல் எபிசோட் பார்த்தது 2020 அக்டோபராக இருக்கலாம். ஹேர்கட் செய்யாமல் தாடியும் மீசையுமாக வீட்டுக்குள் அடைந்திருந்தபோது வசனகர்த்தா முருகேஷ்பாபு தலைமையில் ஒரு ரைட்டர்ஸ் ரூம் ஆரம்பித்தோம். தினமும் கூகுள் மீட்டில் இரவு நேர சந்திப்பு. அந்த சந்திப்பின் வழியாக ஒரு திரைக்கதையே எழுதி முடித்துவிட்டோம். கதை எங்காவது நகராமல் நிற்கும்போது சொந்தக்கதைகள், ஓடிடியில் பார்த்த கதைகள் என பேச்சு திரும்பும். அப்போது முருகேஷ்பாபு பரிந்துரைத்ததுதான் Modern Love. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் மாடர்ன் லவ் என்ற தலைப்பில் வந்த காதல் கட்டுரைகள் பிரபலம். ஒவ்வொரு வாரமும் யாராவது ஒருவர் தன் காதல் கதையை பகிர்ந்து கொள்வார். ஒவ்வொன்றும் வித்தியாசமான சொந்தக் கதை, விதவிதமான மனிதர்கள், விதவிதமான காதல்கள். கட்டுரைகள் Podcast எனப்படும் ஒலி வடிவம் பெற்றன. அதிலும் புதிய காதல் கதைகள் குவிய ஆரம்பித்தன. அதன் அடுத்த கட்டம்தான் அமேசானில் வெளிவந்த மாடர்ன் லவ் வெப் சீரிஸ். நடித்தவர்கள் எல்லோருமே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நட்சத்திரங்கள். Anne Hathaway, Kit Harington, Dev Patel, Lucy Boynton, Minnie Driver, Tina Fey என மிகப்பெரிய நட்சத்திர பட்டியல். ஆனால் நட்சத்திரங்களின் ஈர்ப்பையும் மீறி ஒவ்வொரு கதையும் நம்மை வசீகரித்துக் கொள்கிறது. அதிக பட்சம் முப்பது நிமிடம்தான். ஆனால் ஒவ்வொரு எபிசோடும் இரண்டு மணி நேர படம்பார்த்த திருப்தி. சில வாரங்களுக்கு முன் சீசன் -2 வந்துவிட்டது. நான் அதைப் பார்ப்பதற்கு முன் சீசன் 1ஐ மீண்டும் ஒரு முறை பார்த்தேன். முதல் முறை பார்ப்பது போலவே ஒவ்வொரு எபிசோடும் நம்மை காதல் கொள்ள வைக்கிறது. சீசன் 1ல் இறுதி எபிசோடில், அதற்கு முந்தைய எபிசோடில் வந்த அனைவரின் கதையும் கவிதையாக முடிகிறது. உன்னதமான காதலையும், அன்பையும் திகட்டாமல் பார்த்து இரசிக்க வேண்டுமென்றால் மாடர்ன் லவ் பாருங்கள். நீங்களும் காதலில் விழுவீர்கள். -ISR Selvakumar #ModernLove #AmazonPrime #Romantic #loveStory

Read 5127 times
Login to post comments