Log in

Register



Sunday, 26 December 2021 17:20

மின்னல் முரளி - விமர்சனம்

Written by ISR Selvakumar
Rate this item
(0 votes)

சேட்டன்களின் தேசத்திலிருந்து கைலி கட்டிக் கொண்டு ஒரு சூப்பர் ஹீரோ வந்திருக்கிறான். மொபைல் போன் இல்லாத காலத்தில், ஏதோ ஒரு கேரள கிராமத்தில் இந்தக் கதை நடக்கிறது. அமெரிக்க ஆசையில் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்துவிட்டு இன்ஸ்பெக்டர் மகளை காதலிக்கும் உள்ளுர் டெய்லர் ஜெய்சன்தான் ஹீரோ. பள்ளிக்கூடத்தில் காதலித்த பெண்ணுக்காக 28 வருடமாக காத்திருக்கும் டீ மாஸ்டர் சிபுதான் வில்லன். இருவரையும் ஒரு நள்ளிரவில் மின்னல் தாக்கி சூப்பர் மேனாக்குகிறது. ஆனால் இருவரும் தனக்கு சளி பிடித்திருப்பதாக நினைத்து இருமிக் கொண்டிருக்கிறார்கள். சிபுவாக குணசேகரன், ஜெய்சனாக டொவினோ தாமஸ். இருவருமே கனகச்சிதம்! இருவரும் தன்னை மட்டுமே மின்னல் தாக்கியதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சூப்பர் மேன் கதையாக இருந்தாலும் டீகடையிலும், வீட்டு புழக்கடையிலும்தான் கதை நடக்கிறது. குளோபல் வார்மிங், வைரஸ் பரப்பல், நிலாவில் சண்டை என அமெரிக்கத்தனம் எதுவுமில்லை. லேசர் துப்பாக்கிகளுக்குத் தப்பி உயரமான கட்டிடங்களை இடித்துத் தள்ளாமல், பாத்ரூம் கதவுகளை உடைத்துப் பரிசோதிக்கும் டிபிகல் கிராமத்து சூப்பர் ஹீரோ/வில்லன் கதை. காதலியை ஜெயிக்கவும், பாஸ்போர்ட் வாங்கவும் சூப்பர் மேன் பவர் உதவுகிறது. வங்கிக் கொள்ளைதான் அதிகபட்ச அட்ராசிட்டி. ஆனால் அனைத்தையும் நம்புகிறமாதிரி ஒரு மாஸ் படத்துக்கான உத்தியுடன் எடுத்திருக்கிறார்கள். தியேட்டரில் ரிலீசாகியிருந்தால் கைதட்டல் அதிர்ந்திருக்கும். குறிப்பாக குணசேகரன் தன் சூப்பர் பவரை உணரும் காட்சி. அழுக்கு லுங்கி அழுக்கு சட்டையில் அப்ளாஸ் அள்ளுகிறார். காதல், கடன், ஏமாற்றம் என தினசரி பிரச்சனைகள் சூப்பர் ஹீரோவை இறுதிக்காட்சி வரை இம்சிக்கிறது. அவற்றை மீறாமல் டவுனுக்குள்ளேயே கதை நகர்வதுதான் மின்னல் முரளியின் வெற்றி. ஒரு கட்டத்தில் மின்னல் முரளிதான் ஊர் குற்றங்களுக்கு காரணம் என திருப்பம் நிகழும்போது, வில்லன் ஹீரோ மோதல் துவங்குகிறது. அங்கிருந்து கிளைமாக்ஸ் வரையில் ஜெட் வேகத்தில் காட்சிகள். ஹாலிவுட் பாதிப்பு துளியும் இல்லாத சூப்பர் மேன் கதையை தேர்ந்தெடுத்ததுதான் இயக்குநர் பாசில் ஜோசப்பின் வெற்றி. மின்னல் முரளி - ஒரிஜினல் இன்டியன் சூப்பர் மேன். கண்டிப்பாக நெட்பிளிக்ஸ் ஒரிஜினலாக இரண்டாம் பாகம் வரும் என்பது என் கணிப்பு. - ஐ.எஸ்.ஆர் செல்வகுமார். #MinnalMurali #SuperHero #TovinoThomas #GunaSekaran #Netflix #ISRselvakumar #ISRventures #Review

Read 5300 times
Login to post comments