Log in

Register



Items filtered by date: Monday, 03 January 2022

ஒரு மாணவன் சரியா பரிட்சை எழுதலன்னா, அடுத்த தடவை இன்னும் நல்லா படிச்சு எழுதுன்னு சொல்லலாம். அதை விட்டு உனக்கெல்லாம் எதுக்குடா பள்ளிக்கூடம் என்று திட்டினால் அந்த மாணவன் என்ன ஆவான். அவன் ஆரம்பிக்கும்போதே தோற்கடிக்கப்படுவான் அதுதான் ஒரு இயக்குநருக்கு நடக்கிறது. படம்பிடிக்கவில்லை என்றால் சுட்டிக்காட்டலாம், அடுத்த படம் நன்றாக எடுங்கள் என்று சொல்லலாம். ஆனால் உனக்கெல்லாம் எதற்கு சினிமா என்பது போல கடுமையாக விமர்சனம் செய்யாதீர்கள்.

அவன் எவ்வளவு கனவுடன் அந்தப்படத்தை இயக்கியிருப்பான். அவனை நம்பி எடிட்டர்கள், ஒளிப்பதிவாளர்கள், இணை/துணை இயக்குநர்கள் என்று எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் இந்தப்படம் வெற்றி அடையும். இதை வைத்து அடுத்து ஒரு படம் செய்யலாம் என கனவுடன் இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் தகர்ந்து போகிற அளவுக்கு ஏன் விமர்சனம் செய்கிறீர்கள். இயக்குநர்களின் குடும்பத்தைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா! வறுமை, கடன் என எத்தனையோ இடர்களைத் தாண்டி அந்த இயக்குநர்களின் குடும்பம் எவ்வளவு ஆசையுடனும், கனவுடனும் இருப்பார்கள்!!! என் அப்பாவின் படம், என் சகோதரனின் படம், என் கணவனின் படம் என்று எவ்வளவு பரவசத்துடன் உறவினர்களையும், நண்பர்களையும் படம் பார்க்க அழைத்திருப்பார்கள். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஏன் மிகக் கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள்.

உங்கள் கடுமையான விமர்சனங்கள் அவர்களின் குடும்பத்தினரை எந்த அளவுக்கு காயப்படுத்தும், வேதனைப்படுத்தும், நோகடிக்கும் என்பதையும் யோசித்துப்பாருங்கள். ”விமர்சனம் செய்ய உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுக்கலாமே”, என்று விஜய் ஆன்டனி ஒரு வெப் டிவிக்கு பேட்டியளித்திருந்தார். நான் அதைப் பார்த்துவிட்டு என் ஞாபகத்திலிருந்து எழுதியிருக்கிறேன். அவர் சொல்லிய வார்த்தைகள் மாறியிருக்கலாம். ஆனால் அவர் சொல்லிய கருத்து இதுதான். அவர் சொல்லிய விதமும், சொல்லிய கருத்தும் என் மனதில் அமர்ந்துவிட்டது. இயக்குநர் சேரன் கூட டிவிட்டரில் இது பற்றி பகிர்ந்திருந்தார்.

பிளாக் எழுதத் துவங்கிய பின் எல்லையில்லா எழுத்து சுதந்திரம் கிடைத்தது போல உணர்ந்தேன். அது தந்த மமதையில் என்னிடமும் இந்த கெட்ட குணம் இருந்தது. பட விமர்சனத்தையும் தாண்டி படமெடுத்தவர்களையும் விமர்சித்திருக்கிறேன். அப்போது பெயர் அறிவிக்காத நபர் (Anonymous) ஒருவர் ஒரு கமெண்டில் ”ஏன்யா இப்படி அவங்கள வறுக்கற..” என்று ஆரம்பித்து மிக நாசூக்காக எனது போக்கில் இருந்த தவறை சுட்டிக் காட்டினார். நல்லவேளையாக அவர் சொன்னதை நான் புரிந்து கொண்டேன். உடனே அந்த வலைப்பதிவையும், அதற்கு முன் எழுதிய பல பதிவுகளையும் நீக்கிவிட்டேன். அந்த Anonymous நண்பருக்கு நன்றி. அரசியல் பற்றிய பதிவுகளிலும் கேலி என்ற பெயரில் எல்லை தாண்டுகிறோம் எனத் தோன்றிவிட்டது. பின்னர் அவற்றையும் குறைத்து பின்னர் முற்றிலும் தவிர்த்துவிட்டேன். இந்த இடத்தில் எனது மீறலை சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றி!

திரைப்பிரலங்கள் எப்போதுமே நமக்கு ஒரு Soft Targetதான். வயதில் மூத்த பாடகர்கள், இயக்குநர்கள் நடிகர்களைக் கூட நாம் சர்வசாதாரணமாக அவன் இவன், அவள் இவள் என்றுதான் பேசுகிறோம். அரசியல் பிரபலங்களையும் அவ்வாறே குறிப்பிடுகிறோம். அவர்களை மதிப்புடன் குறிப்பிடுவது நமக்கும் மதிப்பு கூட்டும் ஒரு செயல். ஆனால் இந்த நாகரீகம் ஏனோ நமக்குப் புரிவதே இல்லை. அவர்களின் புகழுக்கும், செல்வத்துக்கும் நாம்தான் என்கிற ஆழ்மன செருக்கு நம் எல்லோரிடமும் இருப்பதாக நான் கருதுகிறேன். அதுதான் நிதர்சனம் என்று சிலர் வாதிடுகிறார்கள். அப்படியானால் நாம் நிராகரித்த எத்தனையோ திறமைசாலிகள் திரை உலகில் இருக்கிறார்கள். அவர்களுடைய வாய்ப்பு இன்மைக்கும், வறுமைக்கும், அல்லலுக்கும் நாம்தான் காரணம் என்று சொல்லலாமா? இதை நாம் ஒப்புக் கொள்வோமா?

திரையுலகினரின் வெற்றிக்கு நாம்தான் காரணம் என்றால் தோல்விக்கும் நாம்தான் காரணமா? இது போல பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே போகலாம். அது நாம் வாழும் சமூகம் பற்றிய உளவியல் ரீதியான ஒரு கட்டுரையாக நீண்டுகொண்டே போகும். ஆனால் அதைப்பற்றி நாம் பேசித்தான் ஆக வேண்டும். அதற்கு இது ஒரு துவக்கமாக இருக்கட்டும். விஜய் ஆன்டனி மிகச் சரியாக உளவியல் ரீதியான கேள்விகளை எழுப்பி துவக்கி வைத்திருக்கிறார். அவர் வார்த்தைகளில் இருந்த உண்மையும், வலியும், தெளிவும் என்னை சிந்திக்கத் தூண்டியது என்னைப் போலவே மற்றவர்களும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று இதை வாசிக்கும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கும் இந்த நிலையில் நம்பிக்கை தரும் மனிதர்களும், வார்த்தைகளும், செயல்களும்தான் சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தேவையாக இருக்கிறது. எனவே நம்பிக்கை தரும் சூழலை உருவாக்குவோம். அதற்காக மீண்டும் ஒரு முறை நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். திரை விமர்சனம் என்ற பெயரில் நாம் செய்வது சரியா?

ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

#VijayAntony #FilmReview #ISRselvakumar #ISRventures

Published in ISR Selva speaking

Calendar

« January 2022 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31