Log in

Register



Sunday, 23 February 2020 08:02

மூன்றாம் பிறை - படம் முடிந்தபின்னும் எழுந்துகொள்ள மனமில்லை

Written by இ.என்.பாபு
Rate this item
(1 Vote)
மூன்றாம் பிறை மூன்றாம் பிறை துயரில் மூழ்கடித்த படம்

சில படங்களைப் பார்க்கும்போது இறுதிக் காட்சி முடிவதற்குள்ளாகவே பார்வையாளர்கள் எழுந்து கிளம்பத் தொடங்குவர். இனி அடுத்து எல்லாம் ஒன்றாகச் சேர்வார்கள், யாவும் நலமாக முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அம்முடிவும் அவ்வாறுதான் இருக்கும். இரண்டரை மணிநேரத்திற்கு அமைதியாக அமர்ந்திருந்தவர்கள் கடைசி இரண்டு மணித்துளிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எழுந்து ஓடுவார்கள். வேறு சில படங்களில் இதற்கு நேர்மாறாகவும் நடக்கும். இறுதிக் காட்சி முடிந்து, படமும் முடிந்து திரையணைந்தால்கூட எழுந்து செல்லும் ஊக்கமில்லாமல் அப்படியே அமர்ந்திருப்பார்கள். படம் அவர்களை அவ்வளவுக்குப் பாதித்திருக்கும். பெரும் சோகம் அவர்களை எழ முடியாதபடி அழுத்திப் பிடிக்கும். துக்க வீட்டிலிருந்து படக்கென்று எழுந்து போக முடியாத இறுக்கம்போன்ற ஒன்று அவர்களைச் சூழ்ந்துவிடும். நானும் அப்படிச் சில படங்களில் எழுந்து போக மனமின்றி உட்கார்ந்திருக்கிறேன். அரங்கமே வெளியேறிய பிறகு கடைசியாளாய் எழுந்து போயிருக்கிறேன். அப்படி என்னைத் துயரில் மூழ்கடித்த படங்களின் ஒன்று 'மூன்றாம் பிறை.'

மூன்றாம் பிறையில் பாலு மகேந்திரா முன்வைத்த ஆண் பெண் உறவு, காதல் என்ற வளையத்துக்குள்ளேயே வராது. அன்பின் வழியே ஓர் உறவு நிலை இயல்பாகக் கனிந்து தொடர்ந்து செல்லும். அதைக் காதல் என்ற வழக்கமான சட்டகத்துக்குள் அடக்குவது தவறுதான். விஜிக்கும் சீனுக்கும் உள்ள இயல்பை மீறிய பாசப்பிணைப்பு மேலும் என்னாகிறது என்ற புள்ளியில் பிரிவே இறுதித் தீர்ப்பாகிறது. ஏனென்றால் சீனுக்கு விஜியின்மீது இருந்தது காதலே என்றாலும் விஜிக்குச் சீனு மீது இருந்தது முதிராச் சிறுமியின் மனத்தில் பெருகும் பேரன்புதான்.

உதகையைப் பற்றி எத்தகைய திரைப்படங்கள் வந்தாலும் மூன்றாம் பிறை உருவாக்கிய துயரத்தை அவற்றால் கடக்க முடியவில்லை. பெருந்துக்கத்தைத் திரையில் தீட்டுவதற்குரிய மலைநிலமாக வெவ்வேறு இயக்குநர்கள் உதகையைப் பயன்படுத்திக்கொண்டனர். பிற்பாடு வந்த 'இதயத்தைத் திருடாதே'விலும் அதேதான் நிகழ்ந்தது. இராபர்ட்-இராஜசேகரன் எடுத்து 'மனசுக்குள் மத்தாப்பு' திரைப்படத்திலும் அவ்வாசனையை முகரலாம். தனிப்பட்ட முறையில் பாலுமகேந்திராவின் விருப்பத்திற்குரிய வெளிப்புறப் படப்பிடிப்புத் தளமும் உதகைதான். படங்களில் பார்த்த உதகையின் பசுமை நேரில் செல்கையில் இல்லாமற் போவதும் உண்டு. பல்வேறு வண்ண அழுத்தங்களைக் கொடுத்து உதகையின் இயற்கையழகை மீறிய காட்சிகளாக அவற்றைக் காட்டுகிறார்கள். பாலுமகேந்திரவின் ஒளிப்பதிவில் இயற்கையழகு மட்டுமே படம்பிடிக்கப்பட்டிருக்கும். சூரியனுக்கும் ஒளிப்பதிவாளர்க்குமான நேரடி வினை அது.

மூன்றாம் பிறையைப் போன்ற இன்னொரு படத்தையோ, அல்லது அதற்கு நிகரான மற்றொரு படத்தையோ பாலுமகேந்திராவினால்கூட பிற்காலத்தில் ஆக்க முடியவில்லை. அதுதான் மூன்றாம் பிறையின் சிறப்பு.
- இ.என்.பாபு

Read 673 times Last modified on Saturday, 29 February 2020 05:20
Login to post comments

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31