Log in

Register



Items filtered by date: Sunday, 11 October 2020

ஒரு குரல் வங்கியை உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம். கொரோனா லாக்டவுனால் அதற்கான நேரம் கிடைத்தது. வாய்ஸ் ஜிம் என்கிற பெயரில் ஒரு ஆன்லைன் பயிற்சித் திட்டம் ஆரம்பித்து நடத்தி வருகிறேன். நாடக ஆசிரியர், பயிற்சியாளர் பகு, பல மொழிப்பாடகி, குழந்தைகள் நாடக ஆசிரியை சாரு, பழங்குடியினர் இசைக்கருவிக் கலைஞர், ஆராய்ச்சியாளர் லியோன் ஆகியோர் தலைமையில் இந்த வாய்ஸ்ஜிம் வகுப்பு நடக்கிறது.

இதில் Learn by Doing என்கிற முறையை பயன்படுத்துகிறோம். ஒரு கதையைக் கொடுத்து அதை வாசிக்கச் சொல்லி பிறகு நடிக்கச் சொல்லி திருத்தங்கள் செய்வது அதில் ஒரு பகுதி. வகுப்பு முடிந்ததும் அவர்களை விட்டுவிடாமல் தொடர்ந்து அவர்களை வைத்து ஆடியோ புத்தகம் உருவாக்குவது என்பது நோக்கம்.

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்புக்காக ஆன்லைனிலேயே குரல் பதிவு நடக்கிறது. இதற்காக நாங்களே ஒரு வீடியோ கான்ஃபரன்சிங் செயலியை உருவாக்கிவிட்டோம். பயிற்சியும், ஆடியோ பதிவும் அதிலேயே நடக்கிறது.

இந்த பரிசோதனையில் ஈடுபடுவது முழுக்க முழுக்க மாணவர்களே என்பதால், அவர்களுக்கு குரல் பயிற்சி மட்டுமில்லாமல், ரிமோட் ரெக்கார்டிங் முறையும் கொஞ்சம் கொஞ்சமாக பழகிவிடுகிறது.  எதிர்காலத்தில் இது சர்வசாதாரணமாகிவிடும் என்பதால் இப்போதே அவர்களை தயார் செய்வதில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! இன்னும் ஒருவருடத்தில் நல்ல குரல் வளத்துடன், நவீன டெக்னாலஜியும் அறிந்த திறமைசாலிகளை நாங்கள் தமிழகத்திற்கு வழங்கப்போகிறோம். தொலைக்காட்சி, வானொலி, யூ டியூப், கலை, இலக்கியம், அரசியல் மற்றும் அலுவலக மேடைகளில் அவர்களின் குரல் ஒலிக்கும்.

சிறுகதை உலகில் நவீனத்தைப் புகுத்திய ”புதுமைப்பித்தன்” எழுதிய ”கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” என்கிற கதையை ரிமோட் ரெக்கார்டிங் முறையில் பதிவு செய்யும் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. ஒலிப்பதிவு நிறைவடைந்ததும் எடிட்டிங். அதையும் மாணவர்களை வைத்தே செய்யும் திட்டங்களும் இருக்கிறது. அதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டவுன் முழுக்க முழுக்க எங்கள் வாய்ஸ்ஜிம் மாணவர்களின் குரல் வண்ணத்தில் உருவான ஆடியோ புத்தங்களை நாங்கள் ரிலீஸ் செய்வோம்.

இதற்கான டெக்னாலஜி தேவைகளையும், ஒருங்கிணைக்கும் வேலைகளையும் தயாரிப்பையும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் என்கிற எங்கள் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.

 

Published in ISR Selva speaking