Log in

Register



ஆயில் புல்லிங் என்கிற புதிய பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. பல்வலிக்கு மாத்திரையை விழுங்குவதற்கு பதில் ஆயில் புல்லிங் பலன் தருமென்று என் சித்தப்பா சொன்னார். அவருடைய நல்லெண்ணை வாக்கு பலித்துவிட்டது. பல்வலியைக் காணோம். தற்போது வாயில் நல்லெண்ணையை நிரப்பிக் கொண்டு, அதை வெளியேற்றும் வரையில், ஏதாவது புத்தகத்தைப் புரட்டும் புதிய உபரிப்பழக்கம் வந்துவிட்டது.

இன்றைய புரட்டல் கணையாழிக் கதைகள் (1995-2000) என்கிற சிறுகதைத் தொகுப்பு. என்றைக்கு வாங்கினேன் எனத் தெரியவில்லை. இன்றைக்குத்தான் சிக்கியது. அதில் ”ஆளில்லாச் சந்துகளில் மரணக் குரலின் நடமாட்டம்” என்கிற கதைதான் முதலில் கண்ணில் பட்டது. தமயந்தி எழுதியது. ஆனால் கதையின் பெயர் அதிகாலை புத்தக ஆர்வத்துக்கு பொருந்தவில்லை. எனவே வேறொரு கதைக்குத் தாவினேன்.

நள்ளிரவில் தூக்கம் வராமல் டீக்கடைக்குப் போகும் குமார், அங்கே கடைசி பஸ்ஸை தவறவிட்டுவிட்டு காத்திருக்கும், ஊர்க்கார பெண்ணைக் காண்கிறான். கண்ணாடி ஜாக்கெட், மல்லிகைப் பூ, நீண்ட ஜடை என அவளைப் பற்றிய வர்ணனை நாயகன் குமாருக்குள்ளும், வாசிக்கும் எனக்குள்ளும், அந்தப் பெண்ணைப் பற்றி, ஒரே மாதிரியான எண்ணங்களைத்தான் உருவாக்கியதா எனத் தெரியவில்லை.

ஆனால் அவள் குமாருடன் அவனுடைய வீட்டில் அன்றைய இரவு தங்கிக் கொள்ளட்டுமா எனக் கேட்கும்போது எனக்கு சுவாரசியம் அதிகமாகிவிட்டது. இந்த வரியில் இதை வாசிக்கும் உங்களுக்கும் சுவாரசியம் வந்திருக்கும். இருவரும் வீட்டுக்கு நடந்து போகும் சொற்ப தூரத்தில் அந்தப் பெண், பழைய முதலாளியின் பெண் என்பதும், தற்போது நொடித்துப் போயிருக்கிறாள் என்பதையும் கதை நமக்குச் சொல்லிவிடுகிறது.

அவள் சூடியிருந்த மல்லிகைவாசம் இருவரும் ஒன்றாக வீட்டுக்குள் நுழைந்த மறுவினாடி குமாருக்கும் எனக்கும் இரட்டிப்பாகிவிட்டது. அந்த மல்லிகைவாசமும், இரவில் தனியாக ஒரு பெண்ணின் அருகாமையும் தன்னை புரட்டிப் போட்டுவிடக் கூடாது என்பதற்காக அவன் அவளுக்கு தன் அறையைக் கொடுத்துவிட்டு, விளக்கெறியும் வெளி அறையில் ஏதோ புத்தகத்தைப் புரட்டுகிறான். உறக்கம் வராமல் அவளும் தன் கணவன் தன்னை விட்டுப் போனதையும், வேறொரு பெண்ணுடன் வாழ்வதையும் அழுகையுடன் சொல்கிறாள்.

இறுதியில் உன்னைப் போல மனதில் களங்கம் இல்லாத ஒருவன் இருப்பதால்தான் நான் இன்னமும் உயிரோடு இருக்கிறேன் என்பாள். அத்துடன் கதை முடிகிறது. ”அவள் நல்லதொரு சகோதரியாய், தோழியாய் தெரிந்தாள்” என கடைசி வரி முடிகிறது.

கிட்டத்தட்ட இதே கருவில் ”சந்நியாசிகள்” என்றொரு சிறுகதை நான் எழுதியிருந்தேன். விகடனில் பிரசுரமானது. இதில் வரும் குமாருக்குப் பதில் அதில் சுரேஷ். பெயரில்லாத ஊர்காரப் பெண்ணுக்குப் பதில் அவனுடைய தோழி. இருவரும் தனியாக அவளுடைய வீட்டில் இருக்க நேர்கிறது. அப்போது அவர்களுக்கு இடையே ஏற்படும் டீன் ஏஜ் மனக்குழப்பங்கள் இப்படித்தான் கடைசி வரியில் முடிந்துவிடும். அதற்கு முந்தைய சில வரிகளில் அப்பெண்ணின் அண்ணன் வருவான். அவர்கள் தனியாக இருப்பதைப் பற்றி எந்த புருவ உயர்த்தலும் இல்லாமல் இயல்பாகப் பேசுவான். எந்த சந்தேகமும் இல்லாத அவனுடைய இயல்பு இவர்களுக்குத் தெளிவு தரும்.

இரண்டுமே இரு இளைஞர்களின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது. அந்தப் பெண்களின் கோணத்திலிருந்து யாராவது இதே கதைகளை எழுதினால் அது இன்னும் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். அதை பெண்கள் மட்டுமே எழுத முடியும் என நினைக்கிறேன்.

சொல்ல மறந்துவிட்டேனே.. நான் வாசித்த கதாசிரியரின் பெயர் ”பாப்லோ அறிவுக்குயில்”, கதையின் பெயர் ”தோழமை என்பது…”

உங்க அனுபவத்திலிருந்து நீங்க சொல்லுங்க… தோழமை என்பது என்ன…?

Published in ISR Selva speaking

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31