Log in

Register



நம்பிக்கையின் கீற்று!
அனாதையாகக்கிடந்த முதியவரின் உடலை, கொரோனாவுக்கு அஞ்சாமல் அடக்கம் செய்த திணைநிலவாசிகள்!

சிலநாட்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மருத்துவரை அடக்கம் செய்ய எவருமே முன்வராத ஒரு அவலத்தை நாம் கண்டோம். களத்திலிருக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக கைதட்டுகிறோம், விளக்கேற்றுகிறோம் என்று போலித்தனமாக டி.விக்கு போஸ் கொடுத்துக் கொண்டாடியவர்களின் சுயரூபத்தை வெளிக்கொணர்ந்த சம்பவம் அது. இருக்கட்டும்! இது போன்ற போலித்தனமானவர்கள் எல்லா இனத்திலும், எல்லா மதத்திலும், எல்லா நாட்டிலும் இருக்கிறார்கள். இதை அறிந்தவர்களில் சிலர் கோபப்பட்டார்கள், சிலர் கேலி செய்தார்கள், சிலர் அமைதியாகக் கடந்தார்கள்.

வெகு சிலர் நடந்தது தங்கள் இருப்பையே காட்டிக் கொள்ளாமல் சலனமற்று இருந்தார்கள். அவர்கள் யார் தெரியுமா? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இந்த உலகமே கைவிட்டாலும், கடவுளே நிராகரித்தாலும் நாங்கள் இருக்கிறோம் என்று தாமே முன்வந்து உதவக் கூடியவர்கள். அவர்களில் சிலர்தான் Thinai NilaVaasigal - திணை நிலவாசிகள் என்கிற நாடகக் கலைஞர்கள். இன்று அவர்கள் செய்த நற்பணி அளப்பறியது.

சென்னை செங்குன்றம் பகுதியில் 73 வயதுதக்க முதியவர் பிளாட் பாரத்தில் அனாதையாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து செங்குன்றம் காவல்துறையினர் திணைநிலவாசிகளை
தொடர்பு கொண்டார்கள். திணைநிலவாசிகள் துளியும் தயக்கமோ, அச்சமோ இல்லாமல் இன்று அந்த முதியவரின் உடலை அடக்கம் செய்தார்கள்.

கொரோனாவை விட நிராகரிப்பு கொடுமையானது. வறுமை, முதுமை, குடும்பத்தகராறு, மனப்பிறழ்வு என பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டவர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே எதிர்காலம் எப்படி இருக்குமோ என்கிற அச்சம் இருக்கிறது. ஆனால் நம் அனைவருக்கும் நம்பிக்கை தரும்விதமாக சில நல் உள்ளங்கள் இந்த பூமியில் இருக்கிறார்கள்.

இந்த நாடும், வனமும், காடும், வானமும் இவர்களைப் போன்ற நல் உள்ளங்களால் நிச்சயம் காப்பாற்றப்படுவார்கள். அந்த நம்பிக்கையை நமக்கு வழங்கியிருக்கும் Thinai NilaVaasigal - திணை நிலவாசிகள் நண்பர்களுக்கு நன்றி!

Published in ISR Selva speaking
Sunday, 22 March 2020 07:11

#StayAtHome அண்ணாத்த!

#StayAtHome அண்ணாத்த!

ரஜினிகாந்தைச் சுற்றி 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் வைத்திருக்கும் யுடியூப் அரசியல் அறிஞர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்களின் வாட்ஸ்அப் அறிவையும், மேம்போக்கான வைரல் உளறல்களையும் தன்னுடைய கருத்துக்களாக ரஜினிகாந்த் பேச ஆரம்பித்திருக்கிறோரா என்கிற சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. கொரோனா வைரஸ் தொடர்பாக அவர் தவறான தகவல் தந்ததாக அவருடைய ட்வீட் ஒன்றை டிவிட்டர் நிறுவனமே நீக்கிவிட்டது. இந்த நடவடிக்கை ரஜினி இரசிகர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிகாந்துக்கே மிகப் பெரிய அதிர்ச்சி தந்திருக்கும். அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்காகவும் காந்திருந்த மீடியா, அவர் தானாக முன் வந்து பேசியதையே நீக்கியிருக்கிறது.

திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்த யுடியூபர்களின் கருத்துக்களை நிறைய பேர் இரசிக்கிறார்கள் என்பது உண்மைதான். தனக்குப் பிடிக்காதவர்களை அவர்கள் தைரியமாக விமர்சிக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்களை பல பேருக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் அவர்கள் வெறும் எண்டர்டெயினர்கள்தான். அதை நமட்டுச் சிரிப்போடு ஃபார்வர்டு செய்வதோடு சகலரும் மறந்து போய்விடுவார்கள். ஆனால் அதையே நீங்கள் சொன்னால், அதை அந்த அரைகுறை யுடியூபர்களைத் தவிர எவரும் ஏற்கமாட்டார்கள். வார்த்தைக்கு வார்த்தை ஆராய்வார்கள், ஏன் இந்த விமர்சனம் அல்லது ஆதரவு என்று கேள்வி கேட்பார்கள்.

ஏனென்றால் நீங்களும் அந்த அரை குறை வாட்ஸ்அப் அறிஞர்களும் வேறு வேறு. உங்களுக்கென்று கோடிக்கணக்கான இரசிகர்கள் கடந்த 40 வருடங்களாக இருக்கிறார்கள். அவர்களின் துணையோடு நீங்கள் அரசியலுக்கு வந்துவிடுவீர்களோ என்கிற எண்ணமும், எதிர்பார்ப்பும் தமிழகம் முழுக்க இப்போதும் இருக்கிறது. அதனால் நீங்கள் மைக் முன்னால் பேசும் வார்த்தைகளில் அரசியல் நேர்மையும், விமர்சனங்களில் அனுபவ அறிவும், கருத்துகளில் அரசியல் தெளிவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் கடந்த சில மாதங்களாக நீங்கள் உங்களுக்கு நெருங்கியவர்களாக காட்டிக் கொள்பவர்களும், உங்களுடைய வாட்ஸ்அப்தனமான பேச்சுகளும், அரசியல் முன்னெடுப்புகளும் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. நான் உட்பட உங்களை இரசித்த இரசிகர்களில் 90% சதவிகிதம் பேரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிவிட்டீர்கள். இரசிகர்களுக்கே இந்த ஏமாற்றம் என்றால், உங்களை மாபெரும் சக்தியாக நினைத்து உங்களுக்கு ஆதரவு தரத் தயாராக இருந்த அனுபவம் மிகுந்த அரசியல் தலைவர்களின் மனநிலை இன்னும் ஏமாற்றமாக இருக்கும் என யூகிக்கிறேன்.

கருணாநிதி, ஜெயலலிதா என்கிற ஆளுமைகள் இருந்தபோது அவர்களுக்கு எதிரானவர்கள், உங்களின் பிம்பத்தைக் காட்டி அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். அதனால் அப்போது பெரிய அளவில் எடுபட்ட உங்கள் பிம்பம் தற்போது எடுபடவில்லை. உங்கள் பிம்பம் யாருக்கு ஆதரவானது அல்லது எதிரானது என்பதில் உங்களுக்கே குழப்பம் வந்துவிட்டது. அதனால் மிக இயல்பாகவே உங்களின் 40 வருட பிம்பம் அந்த ஆளுமைகளுக்குப் பின் மெல்ல மெல்ல மங்கி வருகிறது.

இ.பி.எஸ், ஓ.பி.எஸ், தினகரன், ஸ்டாலின் போன்றவர்களின் பதவி சேஸிங் விளையாட்டை மக்கள் இரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தைரியமாக களத்தில் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவரை தங்களை ஆள தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். நீங்கள் இவர்கள் உள்ள களத்தில் இல்லவே இல்லை. ஆனால் நீங்களும் ரேஸில் இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்க நினைத்து தோற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் உங்கள் நண்பர் கமல் பரவாயில்லை. களத்தில் இருக்கிறார்.

நீங்கள் மதித்த ”சோ சார்” என்பவருக்கு மாற்றாக சில்லறைத்தனமாகப் பேசி கைதட்டல் வாங்கும் ”ஆன்லைன் பிரபலங்களை” உங்களைச் சுற்றி நியமனம் செய்திருப்பதாக கேள்விப்படுகிறேன். இது உண்மையோ, பொய்யோ உங்களுடைய இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது.

நீங்கள் குறிப்பிட்ட வெற்றிடம் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் அரசியலில் அல்ல, சினிமாவில். சினிமா நீங்கள் விட்டுக் கொண்டிருக்கும் இடம், அரசியல் நீங்கள் தொடத் தயங்கும் இடம். உங்களுடைய இப்போதைய இடம் என்ன? மிகப் பெரிய கேள்விக் குறிதான் பதில்.

பி.கு - அண்ணாத்த படம் ரிலீசாகும்போது வழக்கம் போல பார்ப்பேன், அதே போல டிஸ்கவரில் சேனலில் ஒளிபரப்பாகும் ”Into the Wild" அட்வென்சர் (?) நிகழ்ச்சியையும் பார்ப்பேன்.

- ISR Selvakumar

Published in ISR Selva speaking

”கொஞ்சம் வழுகலா கொடுங்க”

விசுக்கென்று தலை சீவிய இளநியை தந்துவிட்டு, ஒரு பேப்பர் ஸ்ட்ராவை செருக முயன்றார் இளநிக்காரர். திடீரென்று கொரானா ஞாபகம் வந்தவுடன் மின்னல் வேகத்தில் ஸ்ட்ராவை மறுத்துவிட்டு, நான் அப்படியே இளநியை உறிஞ்சினேன். அதற்குப்பின் அவர் இளநியைப் பிளந்து தேங்காயை எடுத்து தரும்போது, சீவிய அரிவாளில் கொரானோ இருந்திருக்குமோ என சந்தேகம் வந்துவிட்டது. இப்போது தேங்காயை சாப்பிடலாமா? வேண்டாமா? என ஒரு ஊசலாட்டம். அந்த இளம் தேங்காய் சாப்பிடு என்றது. கொரோனா பயம் வேண்டாம் என்றது. யோசனையுடன் தடுமாறிக்கொண்டிந்தபோது, அந்தப் பெண்ணின் குரல் கேட்டது.

”எனக்கும் ஸ்டிரா வேண்டாம். அவருக்கு மாதிரியே நல்லா சீவி தந்திடுங்க. நானும் அப்படியே சாப்பிடுறேன்” என்ற பெண்ணின் குரல் அன்றைய ரேவதியை ஞாபகப்படுத்தியது. தோற்றம் இன்றைய த்ரிஷா. பளிச்சென்று கருநீலம் மின்னிய சுடிதாரில், காலையில் அவள் சில்லென்று என்னைப் பார்த்த பார்வை இப்போது வரை ஞாபகம் இருக்கிறது. கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர், எதிரில் வந்த வாகனம், டிராபிக் மற்றும் கொரோனா உட்பட எல்லாமே மறந்துவிட்டது.

பிரேக்கிங் நியூஸ் - கருநீல சுடிதார் பெண்களிடம் கொரோனா பயத்தை பளிச்சென்று மறக்கவைக்கும் வசீகரப் புன்னகை இருக்கிறது.

- ISR Selvakumar

Published in ISR Selva speaking

நீங்கள் யாரும் எங்களை பார்க்காமல் இருக்க முடியாது. அதை அந்த நான்கு பெண்கள் சொல்லவில்லை. அலட்சியமாக காற்றில் பறந்த அவர்களின் கூந்தல் சொன்னது.
மாநிறத்துக்கும் கொஞ்சம் கம்மி. ஆனால் பளீரென்று இருந்தார்கள்.
அரக்கு நிறத்தில் மிகச் சாதாரண புடவை. கூந்தலுடன் சேர்ந்து புடவையும் காற்றில் சிலுசிலுத்தது.
காது ஜிமிக்கி, வளையல் உட்பட எல்லாமே நால்வரும் ஒரே நிறத்தில் அணிந்திருந்தார்கள்.
கொலுசு அணிந்திருந்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் நடக்கும்போது ஒரு சங்கீதம் கேட்டது.
படு நெரிசலான புகை படர்ந்த ஹார்ன் அலறிய டிராபிக்.
ஆனால் அவர்களுக்கு கடல் ஒதுங்குவது போல வழி கிடைத்துக் கொண்டே இருந்தது.
அவர்கள் எதிர்சாலையை அடையும் வரை சிக்னல் கூட ஸ்தம்பித்து மாறாமல் நின்று கொண்டிருந்தது.

அழகு என்பது நிறத்திலோ, முகத்திலோ, ஆடையிலோ இல்லை. தன் தோற்றம் பற்றிய நம்பிக்கையிலும், துளைக்கும் பார்வைகளை பார்க்காமலே முறியடிப்பதிலும், அகத்தின் தெளிவை திசையெங்கும் சிதறடிப்பதிலும் இருக்கிறது என்பதை அந்தப் பெண்கள் நிரூபித்தார்கள்.

மீண்டும் அவர்களை நேரில் பார்த்தால் ஹலோ சொல்வேன். பெயர் கேட்பேன்.

என்னைப் போலவே அசோக் பில்லர் சிக்னலில் அவர்களை இரசித்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?

Published in ISR Selva speaking

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31