என் அப்பா ஐ.எஸ்.ஆருக்கு டைரி எழுதுகிற பழக்கம் இருந்தது. அதில் அவர் நடிக்கும் நாடகம், சினிமா, சூட்டிங் மற்றும் அன்றன்று நடந்த சம்பவங்களை சுருக்கமாக எழுதியிருப்பார். ஏதோ ஒரு பக்கத்தில் இயக்குநர் ஸ்ரீதர் பற்றி எழுதியிருந்தார். ஓ மஞ்சு படப்பிடிப்பாக இருக்கலாம். செட்டில் கவனிக்க முடியாத தூரத்தில் இருக்கும் துணை நடிகர்களைக் கூட ஸ்ரீதர் கவனித்தார். அவர்களின் ஆக்ஷன், ரியாக்ஷன்களை சரி செய்தார் என்று வியப்பாக எழுதியிருந்தார்.
ஓ மஞ்சு படத்தில் கேட்கும் திறன் குறைபாடு உள்ள போஸ்ட் மாஸ்டராக நடித்திருந்தார். தந்தி கொடுக்க வரும் தேங்காய் ஸ்ரீனிவாசனின் டைமிங், பாடி லாங்குவேஜ் மற்றும் ஏறி இறங்கும் உச்சரிப்பு அட்டகாசம். அவருடைய அத்தனை சேட்டைகளுக்கும் சிரிக்காமல் ரியாக்ஷன் கொடுத்திருப்பார். பிறகு தன் முறை வரும்போது அப்பாவியாக முகத்துடன் அவர் பேசுகிற வசனங்களும் அதற்கு தேங்காயின் ரியாக்ஷன்களும் அமர்க்களம். குறிப்பாக தேங்காய் தந்தியை தமிழில் சொல்லச் சொல்ல, அதற்கு என் அப்பா ஐ.ஸ்.ஆரின் இங்கிலீஷ் டிரான்ஸ்லேஷன்... சூப்பர்!
இன்று இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் நினைவு தினம். பல புதுமைகளை தமிழ்சினிமாவிற்கு அளித்த ஸ்ரீதரின் இயக்கத்தில் எங்கள் அப்பா ஐ.எஸ்.ஆரும் நடித்தார் என்பதில் எங்களுக்குகெல்லாம் பெருமையே.