யாதுமானவள்!
மழை கொட்டிக் கொண்டிருக்கும் இந்த ஈரமான மாலையில் யாதுமானவள் நினைவுக்கு வந்துவிட்டாள்.
சினிமாக் கனவை நோக்கி நான் எடுத்து வைத்த முதல் அடிதான் ”யாதுமானவள்”, குறும்படம்.
ஏதோ ஒரு அதிகாலையில் சுஜாதாவின் கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்த நிஜ சம்பவம், எனக்குள் ஸ்கிரிப்டாக உருவானது. அதனை படமாக்க முடிவு செய்தேன். அப்போதுதான் காலம் விந்தையானது என்பதை உணர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. எதிர்பாராத இனிய ஆச்சரியமாக அந்த ஸ்கிரிப்டுக்கு நிஜத்திலேயே தொடர்புள்ள திரு. சுகுமார் அவர்களை சந்தித்தேன். அவரை சந்தித்ததும், அதன் பின் நடந்தவைகளும், எவராலும் யூகிக்க முடியாத நினைவுகளாக மாறிவிட்டது. அதனை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.
2011 டிஜிட்டல் திரைப்படங்கள் பிரபலமாகாத வருடம். என் சித்தப்பா சோலை ஆதரவுடன் Canon 7D காமிராவை வாங்கினோம். ஆனால் ஒளிப்பதிவாளர்கள் யாரும் ஆதரவு தரவில்லை. Canon 7D-யில் ஃபோட்டோ எடுக்கலாம், வீடியோ எடுக்க முடியாது என்று ஒதுங்கினார்கள்.
வேறு வழியின்றி நானே யுடியூப் உதவியுடன் அதனை பயன்படுத்தக் கற்றுக் கொண்டேன். வீட்டுக்குள்ளேயே ஒவ்வொரு காட்சியையும் படம்பிடித்து, எடிட் செய்து பார்த்தேன். நம்பிக்கை வந்ததும் தைரியமாக படப்பிடிப்பில் இறங்கினேன். யாதுமானவள் உருவானாள். சகோதரர், இயக்குநர் நவீன் உதவியுடன், தேசிய விருதுக்கு அனுப்பி வைத்த அனுபவமும் கிடைத்தது.
யாதுமானவளுக்கும், பெரு மழைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதனால்தானோ என்னவோ இன்றைய திடீர் இடி மழை எனக்கு யாதுமானவளை ரி ரிலீஸ் செய்யத் தூண்டியது. உடனே ஒரு போஸ்டரை தயார் செய்து அறிவித்துவிட்டேன்.
விரைவில் ரீ ரிலீஸ் தேதியை அறிவிக்கிறேன்.
எழுத்தாளர் மற்றும் திறனாய்வாளர் அர்ஷா, 'Book Vibe' என்ற புதிய பதிப்பகத்தைத் தொடங்கியுள்ளதை அறிந்து மகிழ்ச்சி.
புத்தகங்களை வெறும் காகிதத் தொகுப்பாகப் பார்க்காமல், அறிவு, அனுபவம், மற்றும் கற்பனையின் விதைகளாகக் கருதும் அவருடைய பார்வை மிகவும் போற்றுதலுக்குரியது. கையெழுத்துப் பிரதி முதல் அட்டைப்படம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் நேர்த்தியையும், அழகியலையும் கடைப்பிடிப்பது வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
'Book Vibe' எனும் இந்தப் புதிய அத்தியாயம், பல புதிய எழுத்தாளர்களுக்கும், தரமான படைப்புகளுக்கும் ஒரு சிறந்த தளமாக அமையும் என நம்புகிறேன். இந்த உன்னதமான பயணத்தைத் தொடங்கியிருக்கும் அர்ஷாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!
ISR Selvakumar
Content Creation : Gemini AI
Content Curation : ISR AI STUDIO
30 வருடங்கள், 575 படங்கள்!
மக்கள் தொடர்பு பணியில் இத்தனை வருடம் நீடித்திருப்பது ஒரு சாதனைதான்.
நிகில் முருகனை முப்பது வருடங்களாகத் தெரியும். ரபிபெர்னார்ட் தலைமையில் விஜய் டிவியில் பணிபுரிந்தபோது, சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்த நிகிலை எனக்கு ஞாபகமிருக்கிறது. அப்போது ICFல் பணிபுரிந்தார் என நினைக்கிறேன். பகுதி நேரமாக மக்கள் தொடர்பில் ஈடுபட்டிருந்தார். அதற்கப்புறம் ரஜனி, கமல் போன்ற உச்ச வெளிச்சங்களின் மேடை நிகழ்வுகளை அவர்தான் பரபரப்பாக ஓடி ஓடி திட்டமிட்டார். இப்போது தென் இந்தியா, வட இந்தியா என விரிவடைந்திருக்கிறார்.
ஆனால் நிகில் என்னை கடந்த 15 வருடங்களாகத்தான் ஞாபகம் வைத்திருக்கிறார். சமீப காலமாக அடிக்கடி சந்திக்கிறோம். எதற்கு என்பதை விரைவில் அவரே சொல்வார்.
வாழ்த்துகள் நிகில்!
- ISR Selvakumar
ஒரு த்ரில்லர் எடுப்போம். அப்போதுதான் 2K Kids பார்ப்பார்கள் என்றன நண்பர் கருத்துகள்.
அதனால் ஒரு த்ரில்லர் ஸ்க்ரிப்டுடன் களமிறங்கிவிட்டோம்.
ஒரு சினிமாவின் அத்தனை தேவைகளையும் ஏ.ஐ வழியாக நடத்திக்காட்டுவது சவால்தான். எனினும் முயற்சியை துவக்குவதே வெற்றிதான்.
விரைவில் டைட்டில் அறிவிப்பு!
- ISR Selvakumar
AI தமிழி
AI, AI சினிமா, AI நடிகர்கள் என எந்த ஐடியாவும் இல்லாதபோது உருவானவள் இவள்!
கோவிட் அச்சம் மறைந்து கொண்டிருந்த இறுதிக் காலத்தில் MidJourney, D-Id மற்றும் Discord பற்றிப் படித்தேன். ஆர்வம் தொற்றியதும் மிட்ஜர்னி வழியாக அவளை உருவாக்கினேன். பிறகு டிஸ்கார்ட் வழியாக டி-ஐடியில் நுழைந்து குரலும் அசைவும் கொடுத்து வாட்சப்பில் உலவவிட்டேன். புதியதலைமுறை டிஜிட்டல் அதனை செய்தியாக்கியது. அவ்வளவுதான்! அடுத்த 5 நிமிடங்களில் நான் உருவாக்கிய ஏ.ஐ பெண் வைரலாகிவிட்டாள், எனக்கும் திடீர் வைரல் ஸ்டார் வெளிச்சம் கிடைத்தது. ஏ.ஐ வல்லுனர் என்ற மிகையான பட்டமும் ஒட்டிக்கொண்டு இப்போது வரை நீடிக்கிறது.
யாரை சந்தித்தாலும் அந்தப் பெண்ணைப்போல பேசி நடித்துக் காண்பித்தார்கள். அவளை உருவாக்கியபோது பெயர் கிடையாது. முதன் முதலில் இவளைப் பார்த்த ஃபேஸ்புக் கவிஞர் ஒருவர் (ஸாரி பெயர் மறந்துவிட்டது), இவளுக்கு தமிழி எனப் பெயர் சூட்டினார். எனக்கும் பிடித்திருந்தது. பத்திரிகைகளிலும் அவள் பெயர் பிரசுரமாகிவிட்டது. அதற்குப் பின் தான் நான் இதில் கவனம் செலுத்தினேன். திடீர் புகழில் மயங்கிவிடாமல் மீடியா, சினிமா, டிவி மற்றும் மேடைகளில் எப்படி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது என சிந்திக்க ஆரம்பித்து நடைமுறைப்படுத்தினேன். என்னுடைய ஏ.ஐ பெண்கள் மேடைகளில் தொகுப்பாளராகத் தோன்றி கைதட்டல் பெற்றார்கள். ஏ.ஐ சினிமாவில் ஆர்வம் அதிகமானதும் நமக்கு நாமே ஏ.ஐ நடிகர், நடிகைகளை உருவாக்க முடிவெடுத்தேன். என்னை நாடி வந்த முதல் ஏ.ஐ பெண் இவள். அதனால் அவளையே முதல் ஏ.ஐ நடிகையாக அறிவித்தேன். அதன் முதல் அறிவிப்பு இப்படித்தான் இருந்தது. பாருங்கள், அவளுடைய முதல் தோற்றம் இப்படித்தான் இருந்தது. இப்போது பல உடைகளில், பல காஸ்ட்யூம்களில் கலக்குகிறாள். விரைவில் திரையில் நடிப்பாள்.
தமிழியைப் பற்றிய முதல் போஸ்டர் இது.
- ISR Selvakumar
அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களுக்காகவே ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது "The Tamil Radio"
இந்த இணைய வானொலியில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. தொகுப்பாளர் நாகா வழங்கும் இந்நிகழ்ச்சியில் அவருடன் இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் உரையாடுகிறார் இந்நிகழ்ச்சி இன்று (16.02.2022) இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்நிகழ்ச்சியில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் எதையெல்லாம் இரசிக்கிறான், Crush, Pubbly Love என்றால் என்ன? யாதெனக்கேட்டேன் படத்தில் உள்ள காதல் - போன்ற பல சுவாரசியமான தகவல்களை இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் பகிர்ந்து கொள்கிறார்.
நிகழ்ச்சியை பின்வரும் இழையில் கேட்கலாம்.
வாய்ப்பும் நேரமும் உள்ளோர் உரையாடலை கேட்டுவிட்டு உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
#StayAtHome அண்ணாத்த!
ரஜினிகாந்தைச் சுற்றி 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் வைத்திருக்கும் யுடியூப் அரசியல் அறிஞர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்களின் வாட்ஸ்அப் அறிவையும், மேம்போக்கான வைரல் உளறல்களையும் தன்னுடைய கருத்துக்களாக ரஜினிகாந்த் பேச ஆரம்பித்திருக்கிறோரா என்கிற சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. கொரோனா வைரஸ் தொடர்பாக அவர் தவறான தகவல் தந்ததாக அவருடைய ட்வீட் ஒன்றை டிவிட்டர் நிறுவனமே நீக்கிவிட்டது. இந்த நடவடிக்கை ரஜினி இரசிகர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிகாந்துக்கே மிகப் பெரிய அதிர்ச்சி தந்திருக்கும். அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்காகவும் காந்திருந்த மீடியா, அவர் தானாக முன் வந்து பேசியதையே நீக்கியிருக்கிறது.
திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்த யுடியூபர்களின் கருத்துக்களை நிறைய பேர் இரசிக்கிறார்கள் என்பது உண்மைதான். தனக்குப் பிடிக்காதவர்களை அவர்கள் தைரியமாக விமர்சிக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்களை பல பேருக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் அவர்கள் வெறும் எண்டர்டெயினர்கள்தான். அதை நமட்டுச் சிரிப்போடு ஃபார்வர்டு செய்வதோடு சகலரும் மறந்து போய்விடுவார்கள். ஆனால் அதையே நீங்கள் சொன்னால், அதை அந்த அரைகுறை யுடியூபர்களைத் தவிர எவரும் ஏற்கமாட்டார்கள். வார்த்தைக்கு வார்த்தை ஆராய்வார்கள், ஏன் இந்த விமர்சனம் அல்லது ஆதரவு என்று கேள்வி கேட்பார்கள்.
ஏனென்றால் நீங்களும் அந்த அரை குறை வாட்ஸ்அப் அறிஞர்களும் வேறு வேறு. உங்களுக்கென்று கோடிக்கணக்கான இரசிகர்கள் கடந்த 40 வருடங்களாக இருக்கிறார்கள். அவர்களின் துணையோடு நீங்கள் அரசியலுக்கு வந்துவிடுவீர்களோ என்கிற எண்ணமும், எதிர்பார்ப்பும் தமிழகம் முழுக்க இப்போதும் இருக்கிறது. அதனால் நீங்கள் மைக் முன்னால் பேசும் வார்த்தைகளில் அரசியல் நேர்மையும், விமர்சனங்களில் அனுபவ அறிவும், கருத்துகளில் அரசியல் தெளிவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் கடந்த சில மாதங்களாக நீங்கள் உங்களுக்கு நெருங்கியவர்களாக காட்டிக் கொள்பவர்களும், உங்களுடைய வாட்ஸ்அப்தனமான பேச்சுகளும், அரசியல் முன்னெடுப்புகளும் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. நான் உட்பட உங்களை இரசித்த இரசிகர்களில் 90% சதவிகிதம் பேரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிவிட்டீர்கள். இரசிகர்களுக்கே இந்த ஏமாற்றம் என்றால், உங்களை மாபெரும் சக்தியாக நினைத்து உங்களுக்கு ஆதரவு தரத் தயாராக இருந்த அனுபவம் மிகுந்த அரசியல் தலைவர்களின் மனநிலை இன்னும் ஏமாற்றமாக இருக்கும் என யூகிக்கிறேன்.
கருணாநிதி, ஜெயலலிதா என்கிற ஆளுமைகள் இருந்தபோது அவர்களுக்கு எதிரானவர்கள், உங்களின் பிம்பத்தைக் காட்டி அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். அதனால் அப்போது பெரிய அளவில் எடுபட்ட உங்கள் பிம்பம் தற்போது எடுபடவில்லை. உங்கள் பிம்பம் யாருக்கு ஆதரவானது அல்லது எதிரானது என்பதில் உங்களுக்கே குழப்பம் வந்துவிட்டது. அதனால் மிக இயல்பாகவே உங்களின் 40 வருட பிம்பம் அந்த ஆளுமைகளுக்குப் பின் மெல்ல மெல்ல மங்கி வருகிறது.
இ.பி.எஸ், ஓ.பி.எஸ், தினகரன், ஸ்டாலின் போன்றவர்களின் பதவி சேஸிங் விளையாட்டை மக்கள் இரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தைரியமாக களத்தில் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவரை தங்களை ஆள தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். நீங்கள் இவர்கள் உள்ள களத்தில் இல்லவே இல்லை. ஆனால் நீங்களும் ரேஸில் இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்க நினைத்து தோற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் உங்கள் நண்பர் கமல் பரவாயில்லை. களத்தில் இருக்கிறார்.
நீங்கள் மதித்த ”சோ சார்” என்பவருக்கு மாற்றாக சில்லறைத்தனமாகப் பேசி கைதட்டல் வாங்கும் ”ஆன்லைன் பிரபலங்களை” உங்களைச் சுற்றி நியமனம் செய்திருப்பதாக கேள்விப்படுகிறேன். இது உண்மையோ, பொய்யோ உங்களுடைய இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது.
நீங்கள் குறிப்பிட்ட வெற்றிடம் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் அரசியலில் அல்ல, சினிமாவில். சினிமா நீங்கள் விட்டுக் கொண்டிருக்கும் இடம், அரசியல் நீங்கள் தொடத் தயங்கும் இடம். உங்களுடைய இப்போதைய இடம் என்ன? மிகப் பெரிய கேள்விக் குறிதான் பதில்.
பி.கு - அண்ணாத்த படம் ரிலீசாகும்போது வழக்கம் போல பார்ப்பேன், அதே போல டிஸ்கவரில் சேனலில் ஒளிபரப்பாகும் ”Into the Wild" அட்வென்சர் (?) நிகழ்ச்சியையும் பார்ப்பேன்.
- ISR Selvakumar
”கொஞ்சம் வழுகலா கொடுங்க”
விசுக்கென்று தலை சீவிய இளநியை தந்துவிட்டு, ஒரு பேப்பர் ஸ்ட்ராவை செருக முயன்றார் இளநிக்காரர். திடீரென்று கொரானா ஞாபகம் வந்தவுடன் மின்னல் வேகத்தில் ஸ்ட்ராவை மறுத்துவிட்டு, நான் அப்படியே இளநியை உறிஞ்சினேன். அதற்குப்பின் அவர் இளநியைப் பிளந்து தேங்காயை எடுத்து தரும்போது, சீவிய அரிவாளில் கொரானோ இருந்திருக்குமோ என சந்தேகம் வந்துவிட்டது. இப்போது தேங்காயை சாப்பிடலாமா? வேண்டாமா? என ஒரு ஊசலாட்டம். அந்த இளம் தேங்காய் சாப்பிடு என்றது. கொரோனா பயம் வேண்டாம் என்றது. யோசனையுடன் தடுமாறிக்கொண்டிந்தபோது, அந்தப் பெண்ணின் குரல் கேட்டது.
”எனக்கும் ஸ்டிரா வேண்டாம். அவருக்கு மாதிரியே நல்லா சீவி தந்திடுங்க. நானும் அப்படியே சாப்பிடுறேன்” என்ற பெண்ணின் குரல் அன்றைய ரேவதியை ஞாபகப்படுத்தியது. தோற்றம் இன்றைய த்ரிஷா. பளிச்சென்று கருநீலம் மின்னிய சுடிதாரில், காலையில் அவள் சில்லென்று என்னைப் பார்த்த பார்வை இப்போது வரை ஞாபகம் இருக்கிறது. கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர், எதிரில் வந்த வாகனம், டிராபிக் மற்றும் கொரோனா உட்பட எல்லாமே மறந்துவிட்டது.
பிரேக்கிங் நியூஸ் - கருநீல சுடிதார் பெண்களிடம் கொரோனா பயத்தை பளிச்சென்று மறக்கவைக்கும் வசீகரப் புன்னகை இருக்கிறது.
- ISR Selvakumar
இரவு பதினோரு மணிக்கு செக்கில் ஆட்டிய எண்ணையைத் தேடி ஒரு மளிகைக் கடைக்குள் நுழைந்தபோது...
வாசலில் இருந்த பூண்டு மூட்டைகளை தூக்கி வைத்தபடியே அவன் கேட்டான்.
”என்ன அண்ணே இப்படி ஆயிருச்சு? எல்லாத்தையும் மூடச் சொல்லிட்டா எப்படிண்ணே பொழைக்கிறது?”
”டேய்ய்ய்ய்... ரொம்ப ஃபீல் பண்ணாத. உன் டாஸ்மாக்கை மூடச் சொல்லல. அது தெறந்துதான் இருக்கு.”, என்றார் பில் போட்டுக்கொண்டிருந்தவன்(ர்)
நான் எண்ணையை எடுத்துக் கொண்டு பில் போட வந்துவிட்டேன்.
அவன் அடுத்த பூண்டு மூட்டையை தூக்க முடியாமல் தடுமாறிக் கொண்டே.. ”ஐயய்யோ நாளைக்கு கிடைக்காதுன்னு நெனச்சு எக்ஸ்ட்ராவா ரெண்டு குவார்ட்டரை வாங்கிட்டேனே.”, என்றான்.
எருமை, உன் வேட்டிக்குள்ள இருந்து பாட்டில் சத்தம் வந்தப்பவே நெனச்சேன். கஸ்டமர் இருக்கும்போது ஏண்டா இங்க வர்ற, உங்களுக்கு வேற என்ன சார்?
நான் பதில் சொல்லும் முன் இன்னொரு குரல் கேட்டது, அரை டிரவுசரில் தாடி வைத்த பாச்சுலர் பையன். அவன் எப்போது உள்ளே வந்தானோ...
”குமாரு (பெயரை மாற்றிவிட்டேன்), எனக்கு அவன் கிட்ட இருந்து ஒரு பாட்டிலை தேத்திக் குடு. வாங்க மறந்துட்டேன்”, என்றான்
வாசலிலிருந்தே, ”மேல பத்து ரூபா”, என்றான் பூண்டு மூட்டைக்காரன்.
உற்சாகமான இரவு வணக்கம் மக்காஸ்! குடி குடியைக் கெடுக்கும். கொரானாவை என்ன செய்யும் எனத் தெரியவில்லை. ஊரெல்லாம் டாஸ்மாக் கடை வழக்கம்போல இயங்கிக் கொண்டிருக்கிறது.