Log in


நான் ரஜினிகாந்த் மற்றும் ஆமிர் கான் ஆகிய இருவரின் தீவிர ரசிகன். இருவரும் இந்திய சினிமாவின் மாபெரும் கலைஞர்கள். அவர்களின் திறமையும், அர்ப்பணிப்பும், திரையில் கொண்டு வரும் மேஜிக்கும் எப்போதும் என்னை கவர்ந்தவை. இவர்கள் இருவரும் இணையும் கூலி படத்தை எதிர்பார்த்தபோது, என் மனதில் ஒரு பெரிய ஆரவாரமே ஓடியது. ஆனால், படம் பார்த்த பிறகு, அவர்களுக்கு இடையிலான காட்சிகள் என்னை ஏமாற்றமடையச் செய்தன. லோகேஷ் கனகராஜின் எழுத்து மிகவும் சுமாராக இருந்தது. இந்தியாவின் இரு மாபெரும் நட்சத்திரங்களை வைத்து இப்படி ஒரு சாதாரண காட்சிகளை உருவாக்கியது ஏன் என்று தோன்றியது.

ஆனால், சமீபத்தில் ஒரு புயல் போல பரவிய ஒரு செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்தது. ஆமிர் கான், கூலி படத்தைப் பற்றி எதிர்மறையாக பேசியதாகவும், படத்தின் எழுத்து மோசமாக இருந்ததாகவும், இது ஒரு "பெரிய தவறு" என்று கூறியதாகவும் ஒரு செய்தித்தாள் கட்டுரையின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு நொடி நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆமிர் கான், ரஜினியை மிகவும் மதிக்கக் கூடியவர். பல பேட்டிகளில் அவர் ரஜினியின் மீது தனக்கு உள்ள மரியாதையையும், அன்பையும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவர், படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும்போது இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருப்பாரா? ம்ஹூம், எனக்கு நம்பிக்கை இல்லை.

இப்போது ஆமிர் கானின் குழு அதிகாரபூர்வமாக இந்த செய்தியை மறுத்திருக்கிறது. "ஆமிர் கான், ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் மற்றும் கூலி படக் குழுவை மிகவும் மதிக்கிறார். படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது, இது படத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது," என்று அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். இந்த மறுப்பு என் மனதை ஆசுவாசப்படுத்தியது. ஆனால், இந்த சர்ச்சை மூலமாக மற்றொரு முக்கியமான விஷயம் என் கவனத்தை ஈர்த்தது - ஊடகங்களின் தரமிழப்பு.

இந்தப் பொய்ச் செய்தியை எந்த ஆதாரமும் இல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் கூட வெளியிட்டது என்னை அதிரவைத்தது. ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன், அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு இல்லையா? இப்படி பரபரப்புக்காக மட்டுமே செய்திகளைப் பரப்புவது, ஊடகங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. இது மிகவும் கவலை தரும் விஷயம்.

லோகேஷ் கனகராஜுக்கு ஒரு சின்ன அறிவுரை. ரஜினியின் பெயரை வைத்து, இந்தியாவின் மிகச்சிறந்த திறமையாளர்களை ஈர்த்து, அவர்களை சுமாரான காட்சிகளில் நடிக்க வைப்பது, அவர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் மரியாதைக் குறைவு. எதிர்காலத்தில் இதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ரசிகர்களாகிய எங்களுக்கு, இப்படி ஒரு மாபெரும் கூட்டணியைப் பார்க்கும்போது, பிரமிப்பூட்டும் அனுபவமாக இருக்க வேண்டும், சுமாரான காட்சிகளாக அல்ல.

நீங்களும் இந்த சர்ச்சையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? ஊடகங்கள் இப்படி பொறுப்பில்லாமல் செயல்படுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்!

- ISR Selvakumar
Grok AI எனது சார்பில் எழுதியுள்ள வலைப்பூ இது
தற்போது Grok AI என்னைப் போல் பயிற்சி தந்து வருகிறேன்

Published in ISR Selva speaking
Sunday, 22 March 2020 07:11

#StayAtHome அண்ணாத்த!

#StayAtHome அண்ணாத்த!

ரஜினிகாந்தைச் சுற்றி 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் வைத்திருக்கும் யுடியூப் அரசியல் அறிஞர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்களின் வாட்ஸ்அப் அறிவையும், மேம்போக்கான வைரல் உளறல்களையும் தன்னுடைய கருத்துக்களாக ரஜினிகாந்த் பேச ஆரம்பித்திருக்கிறோரா என்கிற சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. கொரோனா வைரஸ் தொடர்பாக அவர் தவறான தகவல் தந்ததாக அவருடைய ட்வீட் ஒன்றை டிவிட்டர் நிறுவனமே நீக்கிவிட்டது. இந்த நடவடிக்கை ரஜினி இரசிகர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிகாந்துக்கே மிகப் பெரிய அதிர்ச்சி தந்திருக்கும். அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்காகவும் காந்திருந்த மீடியா, அவர் தானாக முன் வந்து பேசியதையே நீக்கியிருக்கிறது.

திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்த யுடியூபர்களின் கருத்துக்களை நிறைய பேர் இரசிக்கிறார்கள் என்பது உண்மைதான். தனக்குப் பிடிக்காதவர்களை அவர்கள் தைரியமாக விமர்சிக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்களை பல பேருக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் அவர்கள் வெறும் எண்டர்டெயினர்கள்தான். அதை நமட்டுச் சிரிப்போடு ஃபார்வர்டு செய்வதோடு சகலரும் மறந்து போய்விடுவார்கள். ஆனால் அதையே நீங்கள் சொன்னால், அதை அந்த அரைகுறை யுடியூபர்களைத் தவிர எவரும் ஏற்கமாட்டார்கள். வார்த்தைக்கு வார்த்தை ஆராய்வார்கள், ஏன் இந்த விமர்சனம் அல்லது ஆதரவு என்று கேள்வி கேட்பார்கள்.

ஏனென்றால் நீங்களும் அந்த அரை குறை வாட்ஸ்அப் அறிஞர்களும் வேறு வேறு. உங்களுக்கென்று கோடிக்கணக்கான இரசிகர்கள் கடந்த 40 வருடங்களாக இருக்கிறார்கள். அவர்களின் துணையோடு நீங்கள் அரசியலுக்கு வந்துவிடுவீர்களோ என்கிற எண்ணமும், எதிர்பார்ப்பும் தமிழகம் முழுக்க இப்போதும் இருக்கிறது. அதனால் நீங்கள் மைக் முன்னால் பேசும் வார்த்தைகளில் அரசியல் நேர்மையும், விமர்சனங்களில் அனுபவ அறிவும், கருத்துகளில் அரசியல் தெளிவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் கடந்த சில மாதங்களாக நீங்கள் உங்களுக்கு நெருங்கியவர்களாக காட்டிக் கொள்பவர்களும், உங்களுடைய வாட்ஸ்அப்தனமான பேச்சுகளும், அரசியல் முன்னெடுப்புகளும் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. நான் உட்பட உங்களை இரசித்த இரசிகர்களில் 90% சதவிகிதம் பேரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிவிட்டீர்கள். இரசிகர்களுக்கே இந்த ஏமாற்றம் என்றால், உங்களை மாபெரும் சக்தியாக நினைத்து உங்களுக்கு ஆதரவு தரத் தயாராக இருந்த அனுபவம் மிகுந்த அரசியல் தலைவர்களின் மனநிலை இன்னும் ஏமாற்றமாக இருக்கும் என யூகிக்கிறேன்.

கருணாநிதி, ஜெயலலிதா என்கிற ஆளுமைகள் இருந்தபோது அவர்களுக்கு எதிரானவர்கள், உங்களின் பிம்பத்தைக் காட்டி அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். அதனால் அப்போது பெரிய அளவில் எடுபட்ட உங்கள் பிம்பம் தற்போது எடுபடவில்லை. உங்கள் பிம்பம் யாருக்கு ஆதரவானது அல்லது எதிரானது என்பதில் உங்களுக்கே குழப்பம் வந்துவிட்டது. அதனால் மிக இயல்பாகவே உங்களின் 40 வருட பிம்பம் அந்த ஆளுமைகளுக்குப் பின் மெல்ல மெல்ல மங்கி வருகிறது.

இ.பி.எஸ், ஓ.பி.எஸ், தினகரன், ஸ்டாலின் போன்றவர்களின் பதவி சேஸிங் விளையாட்டை மக்கள் இரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தைரியமாக களத்தில் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவரை தங்களை ஆள தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். நீங்கள் இவர்கள் உள்ள களத்தில் இல்லவே இல்லை. ஆனால் நீங்களும் ரேஸில் இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்க நினைத்து தோற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் உங்கள் நண்பர் கமல் பரவாயில்லை. களத்தில் இருக்கிறார்.

நீங்கள் மதித்த ”சோ சார்” என்பவருக்கு மாற்றாக சில்லறைத்தனமாகப் பேசி கைதட்டல் வாங்கும் ”ஆன்லைன் பிரபலங்களை” உங்களைச் சுற்றி நியமனம் செய்திருப்பதாக கேள்விப்படுகிறேன். இது உண்மையோ, பொய்யோ உங்களுடைய இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது.

நீங்கள் குறிப்பிட்ட வெற்றிடம் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் அரசியலில் அல்ல, சினிமாவில். சினிமா நீங்கள் விட்டுக் கொண்டிருக்கும் இடம், அரசியல் நீங்கள் தொடத் தயங்கும் இடம். உங்களுடைய இப்போதைய இடம் என்ன? மிகப் பெரிய கேள்விக் குறிதான் பதில்.

பி.கு - அண்ணாத்த படம் ரிலீசாகும்போது வழக்கம் போல பார்ப்பேன், அதே போல டிஸ்கவரில் சேனலில் ஒளிபரப்பாகும் ”Into the Wild" அட்வென்சர் (?) நிகழ்ச்சியையும் பார்ப்பேன்.

- ISR Selvakumar

Published in ISR Selva speaking

Calendar

« March 2026 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31