Log in


How to name it - 2
மிக்க மகிழ்ச்சி இசைஞானியே!
 
"சினிமா பாடல்கள் மட்டும்” என்கிற குறுகிய வட்டத்திற்குள்ளிருந்து எப்போது வெளியே வருவீர்கள் என்ற பல வருடங்களாகக் ஏங்கிக் கொண்டிருந்தேன்.
 
சினிமாப்பாடல்கள்தான் உங்களை எங்களுக்குக் கொடுத்தது என்றாலும், அதையும் தாண்டி உங்கள் கற்பனையின் வீச்சு பரவக் கூடியது.
 
திரைக்கதை, சூழல், பல்லவி, சரணம், மீட்டர் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், How to name it, Nothing but wind போன்ற தனி இசைத் தொகுப்புகளில் உங்களின் இசைப் பிரவாகத்தைக் கேட்டோம். அது தொடரும் என்றே நினைத்தோம். ஆனால் காலம் செல்லச் செல்ல திரை இசை உங்களை சுவீகரித்துக் கொண்டுவிட்டது.
 
எல்லைகள் எதுவுமின்றி உங்கள் மனம் போன போக்கில் நீங்கள் இசையமைக்க வேண்டும் என்பது என்னுடைய பல வருட ஆதங்கம்.
 
ஒரு வேளை இளையராஜாவை சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தால், நான் அவரிடம் சினிமா பாடலுக்கு இசையமைக்க கேட்க மாட்டேன். ஒரு தனித் தொகுதி (Album) வெளியிடுங்கள் என்றுதான் கேட்பேன், என என் நெருக்கமான நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்திருக்கிறேன்.
 
நேரமோ, வடிவமோ கட்டுப்படுத்தாமல், இளையராஜாவின் கற்பனை மட்டுமே எல்லைகளாக உள்ள ஒரு தளத்தில் அவர் மீண்டும் இயங்க வேண்டும் என்பது என் கனா!
என்னுடைய அந்த நீண்ட காலக் கனவு நிறைவேறப்போகிறது என்றே நினைக்கிறேன்.
 
How to name it 2 வெளியாப்போகிறது என்று இளையராஜாவே கூறியிருக்கிறார். மிகுந்த மகிழ்ச்சி! அவரது இசையில் இதுவரை நாம் அறிந்திராத புதுப்புது பரிமாணங்களை இரசிக்கக் கூடிய காலம் வந்துவிட்டது.
வாருங்கள் இசைஞானியே!
- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்
Published in ISR Selvakumar

நமது இந்தியாவை பாரத மாதா என்று ஒரு தாய்க்கு நிகராக நாம் கூறுகிறோம். அந்த பாரத மாதாவின் குரலாக இருந்தவர்தான் லதா மங்கேஷ்கர். 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் எனும் “இசைக் குயில்” செம் மொழியான தமிழ் மொழியிலும் பாடியுள்ளார்.


லதா மங்கேஷ்கர் என்ற பெயரை உச்சரித்ததுமே தமிழ் திரை இசை இரசிகர்களின் மனதில் வளையோசை கல கல கலவென என்கிற இளையராஜாவின் கீதம் ஒலிக்கத் துவங்கிவிடும். காதலர்களின் தேசிய கீதமாக அறியப்படும் இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1988. ”வளையோசை கலகல” பாடலுக்கு முன்பு தமிழ் இரசிகர்கள் கொண்டாடிய லதா மங்கேஷ்கர் பாடல் எதுவென்றால் ”ஆராரோ ஓ ஆரோரோ” என்கிற பாடல்தான். பிரபு நடித்த ஆனந்த் என்கிற இந்தப்படத்துக்கும் இசையமைத்தது இசைஞானிதான்.


லதா மங்கேஷ்கர் ”ஆராரோ” பாடலைப்பாட மிக முக்கியமான காரணம் யார் தெரியுமா? நடிகர் திலகம் சிவாஜி கணேசன். லதா மங்கேஷ்கர் நடிகர் திலகத்தை தன் உடன் பிறவா அண்ணனாக நினைத்து அன்புகாட்டியவர். அவர் மேல் உள்ள பாசம் காரணமாக சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த ஆனந்த் படத்தில் பாட உடனே ஒப்புக் கொண்டார்.
மும்பையில் பாவமன்னிப்பு படத்தை பார்த்த லதா மங்கேஷ்கர் உடனே மெட்ராஸ் வந்துவிட்டார். நேரே சிவாஜியின் வீட்டுக்குச் சென்று தனது சகோதரி மற்றும் குடும்பத்தாருடன் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றிருக்கிறார். அதுதான் சிவாஜியுடன் அவரது முதல் சந்திப்பு.


நடிகர் திலகம் பார்ப்பதற்கு லதா மங்கேஷ்கரின் தந்தை தீனநாத் மங்கேஷ்கர் போலவே இருந்தாராம். அதனால் தன் தந்தையை நினைவுபடுத்திய நடிகர்திலகத்தை தனது ராக்கி சகோதரனாக ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்தினார் அவர். லதா மங்கேஷ்கர் குடும்பமும், நடிகர் திலகம் குடும்பமும் கிட்டத்தட்ட ஒரே குடும்பமாக மாறிப்போனார்கள். நடிகர் திலகம் மறைந்த பின் அவர் நினைவாக, அவர் பெயரிலேயே ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார் லதா. மும்பையில் இன்னமும் அந்த ஆம்புலன்ஸ் சேவை தொடர்கிறது.


1942 ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கர் தன்னுடைய முதல் திரை இசைப்பாடலைப் பாடினார். அது “கிதி ஹசால்” என்ற மராத்திப் பாடல். தமிழ் சினிமாபை் பொறுத்தவரை 1952ல் ஆண் (முரட்டு அடியாள்) என்ற ஹிந்தி டப்பிங் படத்தில் 4 பாடல்களைப் பாடியிருந்தார். தமிழ் சினிமாவில் அவரது குரல் அப்போதுதான் முதன் முதலாக ஒலித்தது.
1955-ம் ஆண்டு ‘உரன் கடோலா’ என்ற இந்திப் படத்தின் தமிழ் பதிப்பான ”வான ரதம்” வெளியானது. அதில் நௌஷத் இசையில் ”எந்தன் கண்ணாளன்” என்ற பாடலை பாடியிருந்தார். ஆனால் இவை எல்லாமே ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட பாடல்கள். எனவே அவர் பாடிய முதல் நேரடி தமிழ் பாடல் என்றால் இசைஞானியின் ஆராரோ பாடல்தான்!


என் புள்ளை பிரபுவுக்காக பாடுகிறேன் என்று பணம் எதுவும் வாங்காமல் அவர் பாடிக்கொடுத்த பாடல்தான் ஆராரோ பாடல். அவர் பாடிய ஆனந்த் , சத்யா, என் ஜீவன் பாடுது, கண்ணுக்கொரு வண்ணக்கிளி உள்ளிட்ட படங்கள் அனைத்துக்கும் இசை இளையராஜா. தமிழில் வேறு எவர் இசையிலும் லதா மங்கேஷ்கர் பாடியதில்லை.


1942ல் பாடத் துவங்கிய இசைக் குயில் 1998ல் இசைப்புயல் ஏ.ஆர்.இரகுமானுடன் தில் சே என்ற இந்திப் படத்துக்காக கை கோர்த்தார். நெஞ்சினிலே நெஞ்சினிலே என்று இசையரசி ஜானகி பாடிய பாடலை இந்தியில் ஜியா ஜிலே என்று லதா மங்கேஷ்கர் பாடினார்.


ரங்தே பசந்தி படத்தில் லதா மங்கேஷ்கருடன் இணைந்து ஏ.ஆர்.இரகுமான் பாடியுள்ள லுக்கா சுப்பி என்கிற பாடலைக் கேட்டால் நம்மையும் அறியாமல் கண்களில் நீர் கசியும். ஏ.ஆர்.இரகுமானுக்கும் அவருக்குமான உறவு தாய்க்கும், மகனுக்கும் உள்ள உறவு போன்றது.

என் தந்தையின் அறையில் லதா மங்கேஷ்கரின் புகைப்படம் இருந்தது. கண்விழிக்கும்போதே லதா மங்கேஷ்கர் முகத்தைப் பார்த்துவிட்டுதான் அந்த நாளை துவக்குவார் என் அப்பா, என்று தன் தந்தை சேகர் பற்றி நினைவு கூர்கிறார் ரகுமான். அதை பார்த்துப் பார்த்து நான் சிறுவனான இருந்தபோதே எனக்குள்ளும் லதாஜியின் இசை நிரம்பிவிட்டது என ரகுமான் ஒரு முறை குறிப்பிட்டார்.

ரகுமான் தன்னுடைய இரங்கல் செய்தியில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார். நான் லதாஜியை சந்திக்கும் வரை, பாடுவதற்காக அதிகம் மெனக்கெட்டதில்லை. மேடை ஏறியதும் பாடி விடுவேன். அவ்வளவுதான். ஆனால் லதாஜியுடன் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தவுடன் நான் மாறிவிட்டேன். தான் பாட வேண்டிய பாடல்களை லதாஜி மேடை ஏறும்வரை பயிற்சி செய்து கொண்டே இருந்தார். பல்லாயிரக் கணக்கான பாடல்கள் பாடிய பின்னும், பயிற்சிக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார்.

அவர் பாடத் துவங்கிய காலத்தில், நௌஷத் அவர்கள், ஒவ்வொரு பாடலுக்கும் 10 நாட்கள் தொடர்ந்து பயிற்சி கொடுப்பாராம். அதை இன்றும் கடைப்பிடிக்கிறார் லதாஜி. நானும் இப்போது அதை கடைப்பிடிக்கிறேன். ஒவ்வொரு கச்சேரிக்கு முன்பும் தம்பூரா வைத்து பயிற்சி செய்கிறேன் என்றார் ரகுமான்.

லதா மங்கேஷ்கரின் சாதனைகளிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். எதைச் செய்தாலும் அதன் ஆழத்தையும், ஆன்மாவையும் வெளிக்கொணர வேண்டுமென்றால் சலிக்காமல் ஒரு முதல்முறை மாணவன் போல பயிற்சி எடுத்துக் கொண்டே இரு என்பதுதான்.
God Bless All!
 
 
- ISR SELVAKUMAR
Published in ISR Selva speaking

Calendar

« March 2026 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31